மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி.......!

உனக்கும் எனக்குமான
நிர்பந்தம் தவிர்த்த உறவில்
தடம் புரளா
ரயில் பெட்டிகள் போல்
சிரத்தை கொண்டு
பயணம் செய்தோம் ...
கால ஓட்டத்தில்
தடங்களும் விரிசல்காண
பெட்டிகள் புரண்டு
உருக்குலைந்து போனோம்!

பிரயத்தனைக் கொண்டு
நெய்யப்பட்ட
சிலந்திவலை உறவில்
ஒவ்வொரு இழைகளாய்
அற்றுப்போக
உனக்காக நானும்
எனக்காக நீயும்
சேகரித்தப் பொருட்கள்
நம்மைப் பார்த்து
ஏளனம் செய்கிறது!

என்றேனும் ஒருநாள்
உன் நினைவில்
நான் வருவதாயின்
அந்த நொடிப்பொழுதில்
எனக்காக மௌனம் காத்து
அஞ்சலி செலுத்திடு!
விட்டுப்போன கடைசித்துளி
கண்ணீரில் ஒரு துளியைக்கூட
சிந்தி.. சிதறி விடாதே
அவ்வீரப்பதத்தில்
உயிர் பெற்றெழும்
என்னால் ...
மறுமுறை
மரணிக்கவியலாது....!

...............சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (22-Jul-14, 9:28 pm)
Tanglish : mouna anjali
பார்வை : 243

மேலே