மூன்றாம் உலகப்போர்

அவசரப் படாதீர்கள் !
ஆயுதம் ஏந்துவது
தற்காப்பிற்கா ? தற்கொலைக்கா ?

ஆவேசப்படாதீர்கள்
அழிக்க நினைப்பது
ஒருவனையா ? உலகத்தையா ?

இனவேறுபாட்டால் யுத்தம் என்றால்
இதில்
மனித இனம் யார் ?
மிருக இனம் யார் ?

தூக்கிப்போடுங்கள்
துப்பாக்கிகளை
உயிர்களின் பெருமைப் பற்றி
துப்பாக்கிகளுக்கு எப்படித் தெரியும் ?

தொடங்கிவிடாதீர்கள்
மூன்றாம் உலகப்போரை
மீறினால்.....

ரத்தக் கடலில் மிதப்பார்கள்
செத்த மீன்களாய் மனிதர்கள்!

ஆயுதங்கள் மட்டுமே
பயணம் செய்யும் விமானத்தில்

அணுகுண்டுகள் மட்டுமே
பாதுகாப்பாக இருக்கும்

பூமி கூட அனாதையாகும்
மனிதர்களை இழந்து

அமைதியைத் தேடி
ஆக்ஸிஜன் கூட
ஒளிந்து கொள்ளும்

காணவில்லை என்ற பட்டியலில்
பூமி இடம்பெறும்

ஒன்பது கோள்களில்
ஒன்று குறைந்து விட்டதென்று
சூரியக் குடும்பத்திற்குச்
செய்தி போகும் !

எழுதியவர் : ஜின்னா (23-Jul-14, 11:36 am)
பார்வை : 212

மேலே