என்னுயிரே
வனம் கொஞ்சும் அழகில்லை
--------விளையாட நதியில்லை
தினம் உன்னை சந்தித்து
--------நான் பேச இடம் இல்லை
பாலைவன சூட்டினிலும்
கவிதை நான் தொடுப்பேன் - என்
பூவனமே நீ சொன்னால்
பொன்முத்தம் கொடுப்பேன் !
இமை மூடி இறந்தாலும்
--------இடிபட்டு வீழ்ந்தாலும்
சுமையென்று எனை எண்ணி
--------சிறை வைத்துப் போனாலும்
உயிர்போகும் நேரத்திலும்
முத்தமொன்று கேட்பேன் - உன்
உணர்சிகளின் தோட்டத்தில்
உயிர்பூவாய் பூப்பேன் !
பனியாகி கரைகின்றேன்
--------உன்னை மனதில் வரைகின்றேன்
தனிமையிலே கண்மூடி
--------கனவுக்குள் மறைகின்றேன்
உனை நினைத்து மெழுகாகி
எரிகின்றேன் தீயில் - என்
உயிர்காற்றால் எனக்குள்ளே
கட்டுகிறேன் கோயில் !
என்னிடத்தில் சேர்ந்துவிடு
--------இதயத்தில் கலந்துவிடு
பொன்மின்னல் பூவிதழால்
--------புதுமுத்தம் தந்துவிடு
உனக்காக வான்மீதும்
நிலவாக உதிப்பேன் - ஒரு
எரிமலையே வெடித்தாலும்
அதன்மீதும் குதிப்பேன் !
தென்றலாக வருகின்றாய்
--------தொட்டனைத்து செல்கின்றாய்
என்மார்பில் முகம்சாய்த்து
--------மெய்சிலிர்க்க வைக்கின்றாய்
நீ சொன்னால் விஷம் கூட
நான் ரசித்து குடிப்பேன் - நீ
விடுகின்ற சுவாசத்தில்
உயிர்வாழ்ந்து முடிப்பேன் !
உனக்குள் நான் வசிக்கின்றேன்
--------உயிர்மூச்சாய் அசைகின்றேன்
உனதுள்ளத் துடிப்புகளை
--------இசையென்று ரசிக்கின்றேன்
நீ வாழ எனதுயிரை
எடுத்துனக்கு அளிப்பேன் - செந்
தீயுனக்கு பிடிக்குமெனில்
தினமும் தீ குளிப்பேன் !
என்னுயிரே கேட்டுக்கொள்
--------எனையின்று ஏற்றுக்கொள்
உன்நெஞ்ச வீட்டுக்குள்
--------எனைவைத்து பூட்டிக்கொள்
சாகும்வரை என்ஜீவன்
உன்பெயரைச் சொல்லும் - உடல்
செத்தாலும் உன்னோடு
உயிர்சேர்ந்து கொள்ளும் !