இறைவர்முன் கூறார் பகைவர்போற் பாரித்து - ஆசாரக் கோவை 71
இறைவர்முன் செல்வமுங் கல்வியுங் தேசுங்
குணனுங் குலமுடையார் கூறார் பகைவர்போற்
பாரித்துப் பல்காற் பயின்று. 71 ஆசாரக் கோவை
பொருளுரை:
நற்குடிப் பிறப்புடையார் தம் செல்வத்தையும், கல்வியையும், உடற் பொலிவையும்,
சாதுர்ய குணங்களையும் அரசர் முன்னிலையில் பலமுறை படித்து பகைவரைப் போல
பரவலாகப் பெருமையுடன் சொல்லமாட்டார்கள்.
கருத்துரை: ஒருவர் தம் செல்வம், கல்வி, உடற் பொலிவு, சாதுர்ய குணம் முதலியவற்றை
அரசர் முன்னர் எடுத்துரைத்து அதனால் கெடுதி அடையாதிருக்க வேண்டும்.
பகைவர்போற் கூறார் என்றதற்கு அங்ஙனம் கூறுதலால் தமக்குத்தாமே பகைவராவர்
என்றும், அல்லது அவ்வாறு கூறுதலைத் தமக்குப் பகைவர் போல் எண்ணிக் கூறாது ஒழிக
என்றும் கொள்ளலாம்.
தற்புகழ்ச்சி கூடாது என்பதே கருத்தாகும்.
அரசன் இறைவன் (கடவுள்) அம்சமாயிருந்து நாட்டைக் காத்தலால் இறைவன் எனப்பட்டான்.
தேசு: தான் தன்னிடத்திருக்கவும், தனது ஆணை எங்கும் செல்வதற்கும், தன்னிடத்து
யாவரும் மேன்மை பாராட்டுதற்கும் காரணமான தெய்வீகத் தன்மை.
பாரித்தல் - பெருக்கிக் கூறுதல்.