அன்பில் ஒரு வாழ்த்து திரு அகன் அவர்களுக்கு

திறமைக ளூக்குவித்து தேடிக் கொணர்வார்
சிறப்பும் அவர்கட்குச் சேர்ப்பார் - இறவாப்
புகழ்பெற பார்த்துளம் பூரிப்பார் மெய்யாய்
அகமகிழ் வாரே அகன் .

அமிழ்தாம் தமிழுக்கு அன்பன்நீ ,ஆசான்
தமிழன்பன் நற்கவிக்கு தாசன் -அமிர்த
கணேசாநின் ஆர்வமும் கண்டோம் தளத்தில்
கணேயமே உந்தன் பணி.

நுட்பமாய் வாசித்து நூல்கள் வெளியிடுவார்
பட்டம ளிப்பார் பரிசுடன் - நட்பாய்
புதுமையாய் பற்பல போட்டிகள் வைப்பார்
புதுவை அமிர்தகணே சன் .

தோழா சிறக்கட்டும் தொண்டு தமிழுக்காய்
தாழா நிலையில் தரணியில் - வீழாமல்
காப்போம் இணைந்து கரங்களும் கோர்த்திடுவோம்
கூப்பி வணங்கிடுவோம் யாம் .


(மதிப்பிற்குரிய அகன் ஐயா அவர்களுக்கு வணக்கம் . நான் எழுத்து தளத்துடன் என்னை இணைத்துக் கொண்டு இன்று ஒரு வருடம் ஆகிறது . இந்த ஒரு வருடப் பயணத்தை திரும்பிப் பார்க்கிறேன் . பிரமிக்கிறேன் . காரணம் , எழுத்து தளத்தில் தவழும் கவிக்குழந்தையாய் இருந்த
எனக்கும் ஐந்தே மாதங்களில் " நற்பா புனை நன்மணி " விருது கொடுத்து ஊக்கப்படுத்தினீர்கள் .அதுமட்டுமல்ல என் கவிதைகளையும் அச்சில் ஏற்றி அகம் குளிரச் செய்தீர்கள் . வார்த்தைகளால் நன்றி சொல்வதைவிட நான் பயிற்சி எடுக்கும் வெண்பா மூலம் தங்களை வாழ்த்த நினைத்தேன் .
தளத்தில் எல்லோரையும் பரிசுப் போட்டிகளால் ஊக்குவிக்கிறீர்கள் . அந்த வகையில் நானும் பல பரிசுகள் பெற்று விட்டேன் . மனநிறைவோடு சொல்கிறேன் நன்றி . எல்லோருக்கும் நான் பெற்ற இன்பம் கிடைக்க வேண்டுமல்லவா ....?? எனக்கு பரிசுகள் போதும். ஒரு சிறு பாராட்டே எனக்கு ஊக்கம் கொடுக்கும் . மிக்க நன்றி ஐயா !!
நான் எழுதிய வெண்பாக்களில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Aug-14, 7:07 pm)
பார்வை : 420

மேலே