சுதந்திரத்தை பற்றி எழுதச்சொன்னால் எதைப்பற்றி எழுதுவது
சுதந்திரத்தை பற்றி
எழுதச்சொன்னால்
எதைப்பற்றி எழுதுவது?
சுதந்திர ம் அடைந்து ஆண்டுகள்
பல கடந்தும் சுதந்திரமாக வாழ
போராடிக்கொண்டிருக்கும்
எம்மக்களை பற்றியா?
இல்லை……
நாங்கள் வாங்கிக்கொடுத்தது தான்
சுதந்திரம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும்
ஏகாதிபத்தியக்காரர்களை பற்றியா?
உழைப்பிற்கான ஈடும் அளவீடுமின்றி
மலக்குவியலிலே தினமும்
உழைத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து
உழைப்பையும் ஓட்டையும் பிடிங்கிச்செல்லும்
அரசியல் வாதிகளை பற்றியா?
இல்லை…………………..
சாதியும் மதமும் சாத்திரக்குப்பையும்,
ஆண்டவன் பெயரில்
மனிதனை ஆளுகின்ற இந்த
(ஜனநாயக) நாட்டை பற்றியா?
எதைப்பற்றி எழுதுவது?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள்
சல்லி தூக்கிக்கொண்டிருக்கும் நாட்டில்
சுதந்திரத்தை பற்றி
எழுதச்சொன்னால்
எதைப்பற்றி எழுதுவது?
விடுதலைக்காக இழந்த உயிர்களுக்கும்
சிந்திய இரத்தத்திற்க்கும் அநியாயத்தை
தவிர வேறொன்றும் செய்யாத நாட்டில்
சுதந்திரத்தை பற்றி
எழுதச்சொன்னால்
எதைப்பற்றி எழுதுவது?
எம் தாயின் கபால ஓடுகளுக்கு
மத்தியில் தூங்கும் போது
உன் தாயின் தாலாட்டு
எப்படி எங்களுக்கு சுகமாகும்?
அப்படித்தான் சுதந்திரமும் எனக்கு.....
சுதந்திரம் என்ற பெயரில்
நமக்கெதிராக வீசப்படும்
அதிகார ஆதிக்க கற்க்களால்
அடிபட எனக்கு ஒருபோதும்
சம்மதமில்லை
சுதந்திரத்தை பற்றி எழுத்தச்
சொன்னால் என் கைவிரல் கூட
எனக்கு துணைவரவில்லை !
~முத்தமிழ் ~