மிளிரும் எழுத்தின் நட்பு ==உலக நண்பர்கள் தினத்துக்காய்
உண்ணும் உணவின் உப்பின் அளவாய்
==உசிதம் கொள்வ துண்மை நட்பு
கண்ணின் இமைபோல் காலம் முழுதும்
==காவல் காப்பது கடமை நட்பு
நொண்டும் நிலையில் கைத்தடி யாகி
==நொடிக்கா திருந்திட உதவி நட்பு
எண்ணம் செயலிரு வேறே யாயினும்
==இதயம் இணைந்திட லன்பு நட்பு
சீற்றம் கொளினும் சிறிது கடந்து
==சிரித்து இணைவது சிறுவர் நட்பு
ஏற்றத் தாழ்வு பாரா திருப்பது
==எதிலும் சிறந்த இயற்கை நட்பு
மாற்றம் வரினும் மாறா திருத்தல்
==மாண்புகள் நிறைந்த மனதின் நட்பு
காற்றைப் போலே சுவாசம் ஆகி
==கலந்தே இருப்பது கருத்துள நட்பு
புல்பிண் ணாக்கு கொடுத்த அன்பை
==பாலாய் பொழிவது பசுவின் நட்பு
‘வள்’எனக் குரைத்து வாசலைக் காத்து
==வாலை ஆட்டல் நாயின் நட்பு
கொல்லும் விஷத்தை கக்கும் பாம்பின்
==குணத்தோ டிருப்பது கூடா நட்பு
அல்லும் பகலும் மாறி வரினும்
==அழியா திருப்பது இயற்கை நட்பு.
வேரில் வார்த்த நீரை உறிஞ்சி
==விளையும் கனியால் விருட்ச நட்பு
ஏரில் பூட்டிய மாடுகள் மண்ணை
==ஏறி உழுவது உழவின் நட்பு
தேரில் அமர்ந்து ஊர்வலம் காண்பது
==திருவிழா கால சிலையின் நட்பு
நீரில் விழுந்த நெருப்பாய் அழிவது
==நேர்மை இல்லா நெஞ்சின் நட்பு
வளரும் கவிஞர் மார்களுக் கெல்லாம்
==வசந்த வாசல் திறக்கும் நட்பு
உளங்கள் பலதை ஒன்றாய் இணைத்து
==உலகம் கவர்ந்து தொடரும் நட்பு
தளங்கள் ஆயிரம் இருந்தும் என்றும்
==தனிமை போக்கிடும் எழுத்தின் நட்பு
குளத்தின் கரையில் கொக்கின் குறிபோல்
==குறிக்கோள் கொண்டே மிளிரும் நட்பு
எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் காற்றலையால் கைகுலுக்கும் என் நல்வாழ்த்துக்கள்