கலங்கரை விளக்கம் நீ
கலங்கரை விளக்கம் நீ
=====================
பாதை இருளின் ஒளியாக
என் பயணங்களோடு நீ கடந்துவிட்ட
இரவு பகல்களின்
எண்ணிக்கைகள் தெரியவில்லை
நம் இத்தனை நாட்களின் பிரிவுகளையும்
சுமந்து கொண்டிருக்கும்
என் தினசரி குறிப்புகளுக்கான
கெளரவம் நீ
கண்ணீரோடு முகங்கள் முட்டும்
நமக்கான நாளொன்று காத்திருக்கிறது
அன்று மட்டும்தான்
நீயும் நானும்
யார் என்பதை மறக்கப் போகிறோம்
அதுவரை
அதற்கான நாளெனபதே தேவையற்றது தெரியுமா
ஏனெனில்
நாம் ஒருநாள் நண்பர்கள் அல்லவே
இன்று மட்டும்
நீ என்னையும் நான் உன்னையும்
எண்ணி அழுதுவிட
என் பேச்சுக்களுக்கான எதுகை மோனைகளும்
யாப்பு அணி இலக்கணங்களும்
என் திமிர், கர்வங்களும்
ஜீவசமாதி யாகும்
உன்னிடத்தில் மட்டுந்தான்
எனக்கான இலக்கணம் நீ என்பதால்
நீ இன்னும் அறிந்திருப்பாயா ??
சொல்லொணா வெகுளித்தனங்களையும்
தேங்கிவிட்ட பாரங்களையும்
புண்பட்டுவிட்ட இரணங்களையும்
கால்களை மடக்கி கரமிறுக்கிப்பிடித்து
அதில் முகம் புதைத்தவண்ணம்
உன்னிடத்தில் மட்டும்
புகார் சொல்லக்காத்திருக்கும்
குழந்தை யொருவனை
வா ஊருக்கு
வழக்கமான ஜனவரி மாதத்தின்
முதல் நாளில்
கூட்டாஞ்சோறு செய்துத்தர எனக்கு
எல்லாராலும் தூற்றி
தூக்கியெறியப்பட்ட
இந்த திமிர்ப்பிடித்தவனை
பிடிவாதக்காரனை சண்டைக்காரனை
சிடுமூஞ்சியை
தொட்டால் சிணுங்கியை
வழக்கம்போல்
உனக்குள் மட்டும் வாங்கிவிட
வா ஊருக்கு
நெஞ்சாங்குலையின் ஏதோ ஒரோரத்தில்
வீற்றுவிட்ட கலங்கரைவிளக்கமாய்
உயர்ந்து நின்றுவிட்டு
திரும்பிப்பார்க்கும் எனக்கு
நானிருக்கிறேன் போய்வா என்பதைபோல்
ஒரு பார்வை பார்ப்பாயே
அதற்காகவேனும்
இருவரும் ஒன்றாய் இருந்து
ஒன்றாய் மரிப்போமா
மரித்து மீண்டும் இதுபோலவே பிறப்போமா
அனுசரன்