மன நரி
ஐந்துகால் கொண்டு
அதிநடஞ் செய்து,
ஆறின் கூட்டோடு
அபிநயங் காட்டி,
மமகாரக் கருஞ்சேற்றில்
தலைமுழுக் காட்டும்!
மகத்துவப் பேரொளி
யாதென்றுச் சான்றோரும்
போதனை செய்வித்துங்
கூடாது.....!
ஊர்கூட்டிச் சொல்லும்,
“ஊமைகாள்......
நானே இங்காவர்க்கும் மேலோன்!”
உரக்கச் சிரிக்கும்!
உண்மை யெதுவென
உணராம லுள்ளே,
உன்மத்த மூறி யுறுமும்!
ஊளையிடும்!
காலை நடு நிசி பாராது!
கனத்த மயக்கத்தில் மூழ்கிக்கிடக்கும்!!
நாளும் பொழுதும்
வனத்தினுள்ளே – இந்த
நரியாடு மாட்டம் சகிக்கவில்லை.....
பரியென் றாலுமதைப்
பழக்க வொருநாள்பழகு மிது,
சிலைபோல் சிலபோதும்
அலைபோல் அவ்வப்போதும்
அழகாய் நடத்தும்
நாடகத்தை யாதென்பேன்?!
சுவாசத்திரி முறுக்கிக்
கயிறாய்ப் பிணைத்தந்த
நரியை யிழுக்கத்
தலைப்பட்டே னொருநாள்,
படிந்தது நரி! – ஆயின்
முழுதாய்ப் படியுமுன்னே
அறுந்தது திரி!
யோகத்தனலெழுப்பி,
போக நரியைப்
பொசுக்க விரும்பினேன்!
தனலெழுந்தோறும் - மோக
அனலெழுந் தது,
நோகுமாறு என்னையே எரித்தது!
சிரித்தது நரி!
சீற்றத்தை யடக்கிக் கொண்டேன்!
நிந்தனை செய்தது!
சிந்தனைநா னிழக்கவில்லை!
முரட்டு நரியதன் முழுபலம்,
சிறுகச் சிறுகச் சரிந்தது....
சோர்ந்தகால்க ளைந்தையுஞ்
சேரக் கட்டுதல் சாத்தியமானது!
அறுந்த திரி,
மீண்டும் பிணைந்தது!
புகைந்த நெருப்பில்
மோகத்தைப் பலியிட்டு,
எழுந்த அழலதை நரிமுன்னே காட்டினேன்...
விழுந்தது நரி..!
தவழ்ந்தது பின்னது குழந்தைப்போலே.....
*********************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்