காத்திடுவோம் பறவை இனத்தை​​

பனித்துளி படர்ந்த பசும்புல் விரிப்பினில்
கனிவுடன் பார்க்கும் அழகுமிகு பறவை !
காணும் படமோ எடுத்தவர்க்கு பெருமை
நோக்கும் அழகோ அதனினும் அருமை !

எண்ணத்தில் தோன்றும் என்ன அதற்கும்
ஏக்கத்தில் விழியும் தாக்குண்டு வழியுதே !
மனிதம் மண்ணில் மறைந்தது காரணமா
மனிதரும் நம்மை மறந்தனரே என்கிறதா !

அலைபேசி கோபுரம் அடிக்கிறது எங்களை
அலைந்து திரிந்து அழிகிறோம் நாங்களும் !
விஞ்ஞானம் வளர்த்து விரட்டினர் எங்களை
விண்ணில் பறக்கவும் தடையா எங்களுக்கு !

சிந்திக்க வைக்கிறது சிந்தையை தொடுகிறது
நிந்திக்கும் பறவையின் வார்த்தையும் புரிகிறது !
காத்திடுவோம் பறவை இனத்தை இவ்வுலகில்
வகுத்திடுவோம் வழியும் தடுப்போம் அழிவதை !

பழனி குமார்

( படம் = முகநூல் பதிவிறக்கம் )

எழுதியவர் : பழனி குமார் (5-Aug-14, 8:46 am)
பார்வை : 173

மேலே