எல்லாமாகிய எழுத்து - ப்ரியன்
முன்பெல்லாம் கனவில்
வந்து வந்து போகும்
என்னவள் முகம்:
இப்பொழுதெல்லாம்
கவிதை
வந்து போகிறது...
காலை எழுந்தவுடன்
முகம்விழிக்க கண்ணாடி
தொடரும் தொலைக்காட்சி:
இப்போதோ
முழுநேரம் முகம்புதையும்
கைக்கணினி...
நான் பார்க்கும் பெண்ணின்
நடவடிக்கை கண்டு
முன்பு காமம் தோன்றியதா
தெரியவில்லை:
இப்போது கவிதை மட்டும்...
அலுவலக அலுவல்கள்
இல்லையென்றால்
வெட்டிக்கதைகள்
வெளியேரும் புகை
இடைவேளையில்
புறட்டிபார்க்க சமூக அரசியல்
புறம்பேச சினிமா கிசுகிசு:
இப்பொழுதோ
இடைவெளி கிடைத்தால்
ஓய்வெடுக்கிறேன் விரும்பி
கணினி திரையில்...
பள்ளி விட்டு வீடுதிரும்பும்
பாலகனாய்
முன்பு அலுவலம் விட்டு:
இப்போதோ
காத்திருக்கும்
காதலி காணும் ஆர்வத்தில்
தளம் கான...
தூக்கம் வராமல் முன்பு
நேரம் தாண்டி
தவித்திருக்கிறேன்:
இப்போது
நேரமின்றி துடிக்கிறேன்
படித் தெழுதி தூங்க...
பதின்ம வயதைத்தாண்ட
காதலற்று
கவிதை எழுத
வார்த்தைகள் அற்று
போகுமென இருந்தேன்:
இப்போது என்னுள்
காதல் வழிந்தோட
வடிகால்கட்டுகிறேன்
வார்த்தைகளால்...
ஆரம்பமானது என்னவோ
உண்மைதான்
விளையாட்டாய்
எழுத்தில் கணக்கு:
இருந்தும்
அதன் நிழலில்லாமல்
இனி பொழுதுகள் கழியுமா
தெரியவில்லை எனக்கு...