இலட்சியத்தின் நிறம் சிவப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
அந்தத் தோட்டா
மிகச்சரியாக
என் நடுமார்பில்
பாய்கிறது !
ஆம் ....
நடுமார்பில் !
தோட்டாவின் வலியை
மூளை உணரும் முன்
மேலும்
அடுத்தடுத்த
தோட்டாக்கள் !
அனிச்சையாக
காற்றில்
சுட்டுக்கொள்கிறது
எனது கை
குண்டு தீர்ந்த
ஒரு துப்பாக்கியை !
தான்
துளைக்கப்பட்டுவிட்டதை
வலியோடு
அறிவிக்கிறது
இதயம் !
உடம்பு
விறைப்பதையும்
கண்கள்
நிலைகுத்துவதையும்
உணர்கிறேன் !
கால்கள் மடங்கி
மண்டியிட்டுச் சரிந்தாலும்
இன்னும்
நெஞ்சுகாட்டவே செய்கிறேன்
என் இனிய
எதிரிக்கு !
எப்படியும்
வீழ்ந்து விடுவேனென்ற
நம்பிக்கையில்
எனக்கான
கடைசித் தோட்டாவையும்
அனுப்பிவைக்கிறான்
அவன்
வெற்றியின் மிதப்போடு !
என்
இறுகிய புன்னகை
அதனை
வரவேற்க ,
தலைக்கு மேலே
வட்டமிடுகிறது
சாவு !
முற்றும் துறந்து
சரிகிறேன் .........
என்னிலிருந்து
பெருகும் குருதி
தாகத்தோடு
தழுவுகிறது
நான்
வீழ்ந்துகிடக்கும்
மண்ணை !
======================
- குருச்சந்திரன்