இனி

நிரம்பி வழிந்தன தென்னாட்டு நீர்நிலைகள்...!
விரும்பிச் சேர்ந்தன கண்மயக்கும் அன்னங்கள்!
அரும்பிச் செழித்தன நற்பயிர்கள் நாற்புறமும்!!

பொன்னுக்குக் குறைவில்லை, அந்நாளில்
மண்ணுக்கு நிகரென்று நிரம்பின காலத்தில் - அதை
நெல்லுக்கு வாங்கிச் சேர்த்தனர் நம்மக்கள்!!

இருகரையின் மர-மலர் கடத்தித் தன்
ஆழிக்காதலர்க்குச் சேர்ப்பித்தாள்-நம்
பாலாற்றுக் காதலி!

அம்மிக்கல்லில் அரைத்த வெஞ்சனத்தை
அம்மாக் கையால் நானுண்ட காலமின்று
பழங்கதையாய்ப் போனதே, அந்தோ!?

குவளையில் அடைத்த தண்ணீரைக் குடிக்கின்றோம்-அதைக்
காசுக்கு விற்கும் கயமை,
கொடுமையிலும் கொடுமை!

அன்னங்களையெல்லாம் சின்னங்களாக்கிச்
சிலைவைத்துவிட்டார்கள்-நம்
பூங்காக்களிலெல்லாம்!

"அரிசி எங்கப்பா செய்யறாங்க?"
இன்று செல்லமகள் என் கன்னம் வருடி
வார்த்தைகளால் வலிக்கச் செய்கிறாள்!

தங்கம் வாங்குவது,
சிங்கத்தின் வீட்டில் சிலகாலமிருப்பதற் கொப்பானதின்று!
மலர் கடத்தும் பனிக்காலம் மறைந்து - நதி
மணல் கடத்தும் பிணிக்காலம் பிறந்ததின்று!!

அம்மாதான் உள்ளாளே..முதியோர் குடிலில்?! -பின்
அம்மிக்கல்லேது? அதிலரைக்கும் வெஞ்சனமேது?!
இயற்கையை நிந்தித்துச் செயற்கையாய் வாழும் மாந்தர்க்கு
மறுப்புக்கு இடமின்றி அதன் வெஞ்சினம்தான் மிஞ்சும் இனி......



***********************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (8-Aug-14, 5:59 pm)
பார்வை : 663

மேலே