ஆதிநாள் தெரியுது,
ஆதிநாள் தெரியுது,
ஆலோலம் கேட்குது அந்தநாள் பாடுது.
காலமும் கூடுது கதிர்விளைஞ் சாடுது
மகிழுது சனமெல்லாம் மனசார வாழ்த்துது.
அகிலத்தின் பறவைகள் தமிழ்நாடு தேடுது.
ஆலோலம் பாடும் குமரிப் பெண்டுகளா!
பூலோகம் கூடும் அமரர் கூட்டங்களா?
கானம் கேட்கும் கானகம் எல்லாம்
வானம் பூக்கும் அழகு நட்சத்திரங்களா?
சுவர்க்கம் மண்ணில் இறங்கி வந்ததா?
பக்கம் கண்ணில் வழங்கித் தந்ததா?
எங்கும் பசுமை தென்றல் சுமந்துமே
பொங்கும் வளமை கொண்டு நிறைந்ததா?
காடு கழனி மேடுகள் எல்லாம்
நாடு உழவு பாடுகள் சொல்லும்
வீடு வழிந்து வெள்ளாமை அள்ளும்
ஓடும் நதிகளும் உறவினில் துள்ளும்.
பட்டணம் கரைந்து பட்டியில் நிறையும்
பட்டதும் மறைந்து கெட்டியில் விரையும்.
திட்டம் நன்றும் தீட்டிய விதமே
கொட்டும் என்றும் ஈட்டிய நிலமே!
வளமது விருப்பந்தான் அழகுப்பச்சை நிறந்தான்.
நிலமது கழனிதான் கனவெல்லாம் பசுமைதான்.
நலமது விவசாயம் நினைவெல்லாம் உழவர்தான்
குலமது உயர்வுதான் இருப்பெல்லாம் அவரால்தான்.
காவேரி பெரியாறு கரையேறி ஓடுது.
தாவாக்கள் முடிவாகி தமிழர் புகழ் சூடுது.
பூவேறி நதிகளும் புதுவெள்ளம் கூடுது.
ஆவரி மழை பொழி அதுகரை மூடுது.
நதிகளும் இணையுது நாடுகள் பிணையுது
விதிகளும் திருந்துது மதிகளும் பொருந்துது.
ஆதிநாள் தெரியுது அன்பினில்விரியுது.
ஒதிநல் வேதங்கள் ஒன்றினில் புரியுது.
கொ.பெ.பி.அய்யா.