காதல் வந்தால்
கடந்த நினைவுகள்
பொக்கிஷமாகும்
கசந்த மனமும்
கனிந்திட பழகும்..!
கண்ணில் தூக்கம் கலைந்த பின்பும்
மனதில் கோடி கனவுகள் வந்திடும்..
தனிமை கூட இனிமை என்று
ரசிக்கும் ஆர்வம் உள்ளில் வரும்..!
முகம் மறைத்த அழகை தேடும்
ஆராட்ச்சிதனை கண்கள் தொடங்கும்..
உளம்பூத்த வெட்கமது தருணம்பார்த்து
மின்னி மின்னி உள்ளில் மறையும்..!
காதல் விழிகள் தேடி பார்த்திட
விளைந்த மனமும் தவமாய் இருக்கும்..
கண்கள் மோதி நாவும் உளற சொல்லும்
வார்த்தைக்காய் உள்ளில் ஒத்திகை நடக்கும்..!
கவர்ந்த குரலை களவுக்கொள்ள காதுகளும்
தினம் வலித்த கால்களோடு காத்து நிற்கும்..
சிக்கிடும் குரலில் ஒற்றை வார்த்தையையும்
உளம் யாழில் மீட்ட உணர்வுகள் மகிழும்..!
அந்தி மயங்க வெளிச்சம் தேடும் மனதும்
நள்ளிரவில் தனித்து நடந்து பயம் மறக்கும்..
அடைக்காக்கும் புன்னகை பூமுகம் வாடுமிடம்
அகிலம் எதிர்க்கும் வீரமும் பிறக்கும்..!
சோகம் விரட்டும் காதலின் தோளில்
சாய்ந்தால் சோலை வனமும் தெரியும்..
அன்பு பகிரும் காதலும் அங்கு
அன்னை மடியின் இதமென புரியும்..!
காதலில் சேர்ந்திடும் உரிமையை கேட்டிட
உணர்வில் விடுதலை தாகமும் ஊறும்..
சிறை பிடிக்கும் சுற்றத்தையும்
துணிந்து எதிர்க்கும் துணிச்சலும் உதிக்கும்..!
காதலை உயிரில் நட்டு வளர்த்தால்
போதிமரத்தடி ஞானம் பெறலாம்..
காதலால் மதத்தை வெட்டிசாய்த்தால்
போகித்தினமெய்து புதிதாய் பிறக்கலாம்..!
....கவிபாரதி....