ஏன் பெண்ணென்று பிறந்தேன்
பருவம் திறந்து விட
பகல் நிலவாய் ஓலை
பாயினில் ஒளிந்த
மங்கை நான்...
பேதையையும், பெதுமையையும்
பேரின்மாய் கடந்து விட்டு
மங்கையான பின்
பேரின்னல்கள் பின்னலாடையாய்
சுற்றுவதைக் கண்டு
சுருண்ட மடந்தை நான்...
அரிவை அடையாதவளுக்கு
ஆண் துணை தேடும்
அறிவை அடைந்த அன்னையே!
அவன் ஆண்மைக்கு பதில் சொல்ல
பேரிளம் பெண் இல்லை நான்..
என் மகள் இன்னும் பேதை தான்
என சொல்லும் தந்தையே!
காம போதை கொண்டவன் தொட்ட
கொ(ல்ல)ள்ள் ஊறுகாய நான்?
எனது கதையில் போஸ் பாண்டி
இல்லாத லதா பாண்டி நான்..
சதைப் பிடிப்பில்லாததால்
பிறர் பார்வைக்கு
பந்தியாகத பாவை நான்...
பருவ பசி கொண்டவனுக்கு,
என்னை தன்னில் பாதியாக
கொண்டவனுக்கு - படுக்கையில்
என்னை பரிமாறியவள் நான்...
பின்னிரவில் அவன் ஆளுமையின்
தாக்கதை சொல்ல அகர வரிசையினை
அதிக சத்தத்தில் உச்சரிக்க அதிகாரம்
அற்ற அடிமை நான்...
இரவில் இவன் தரும்
இன்னல்களினால்
தினம், தினம் செத்து
பிழைப்பவள் நான்...
இரவில் அவன் உடலை புண்ணாக்கினால்
பகலில் அவன் அன்னை
சொத்தேதும் இல்லாவதளென்று
சொற்களால் மனதை புண்ணாக்கிறாள்
இரண்டு புண்ணாக்கையும் கேட்கிறேன் நான்..
இல்லாதவள் என்பது எங்கள் வீட்டு
பலகையில் உட்கார்ந்து பலகாரம்
தின்னும் பொழுதும்,
எனது பன்னிரண்டாம் வகுப்பு
பரிட்ச்சைக்கு பத்து நாட்கள் முன்பு
பரிசம் போட்ட பொழுதும் தெரியாதா?
இந்த வருடம் மணமாகாவிட்டால் இனி
எந்த வருடமும் மணமகாது
என எவனோ சொல்ல கேட்டு
சொத்தேதும் தேவை இல்ல
ஈராறு வயது மூத்தவனின்
பெயரை இவள் பெயரின் இடதில்
சேர்க்கும் சொந்தம் போதுமென்று
சொந்தமாக்கப் பட்டவள் நான்....
சொர்க்கத்தில் நிச்சயத்து
நரகத்திற்கு வாக்கபட்டு
வந்த நன்னாரி நான்..
அதனால் தான் தாயும் மகனும்
என்னை கலந்துக் குடிக்கிறார்கள்
எனது குருதியை படியில்
அளந்து குடிக்கிறார்கள்...
சுமந்த கனவுகளை மாத்திரை
இல்லாமல் கலைத்து விட்டு
கருவை சுமக்க சத்து வேண்டி
மாத்திரை தின்பவள் நான்...
தெரிவை அடைந்த பின்னாவது
எனது தேர்வுகளுக்கு தேதி இருக்குமா?
என்பது தெரியாதவள் நான்...
சேய்மை குணம் கொண்டு
தாய்மை அடைந்தவள் நான்...
என் சேயும் ஒரு பெண்
இப்பொழுது அவள் கேட்கிறாள்....
ஏன் பெண்ணென்று பிறந்தேன்?
நான்...