மண் போடுதல்
எதிர் படும்
எவராவது ஒருவரின் தலையில்
மண்ணை போட்டு விடுவோம் என்று
கண்ணில் எண்ணை
ஊற்றிக் கொண்டு அலைந்தபடி....
நம்மில் அநேகமானவர்கள் இருக்கிறோம்
ஆனால்;ஒருவருக்கு,ஒருவரை தெரியாது
அப்பாவின் அப்பாவின் சொத்தென
கடைசி வாரிசு உனக்கென்று
காட்டினார்கள் ஒரு எல்லையை
நானும் பூரித்தேன்
வயலும்,சேனை திடலுமாக
நிலம் என் முன் விரிந்து கிடந்தது
பெரும் பரப்பாய்
அயலவர்கள்
முகம் காட்டி நலம் வினவினர்
சந்தோஷமாய் இருந்தன
அவர்களின் குசலம் விசாரிப்பு
சிறு இடைவெளியொன்றில்
காலம் என்னை
வீட்டை சுமக்கும் நத்தையாய் ஆக்கியது
நான் நகர்ந்த திசையின்
மறுதிசையிலிருந்து
முல்லைக்காரன் ஊடாய்
ருசிமிகு பழங்கள்,தானியங்கள் என
போகத்துக்கு போகம் பொதி வந்ததாய்
புழகாங்கித்தாள் மனைவி-அது பின்
நின்று விட்டதாகவும் வருந்தினாள்
பிந்திய நாளொன்றில்...,
சேனைக்கு எனது மகனை
அழைத்துச் செல்கிறேன்
அது ஊராய் இருந்தது
மண் போட யாருமில்லை
யாருடைய தலையும் அங்கே
தெரியக் கூடாது என்று
வேறு,வேறு பேர்களின் பெயர்களில்
எல்லைகள் போட்டிருந்தன.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.