அமாவாசை நிலவு

முதிர்க்கன்னிகளுக்கு இந்த கவிதை சமர்ப்பணம் .......

மனசு ஒடிஞ்சிருச்சி
.....வயசும் முடிஞ்சிருச்சி
கனவ சுமந்தேஎன்
.....காலம் முடிஞ்சிருச்சி

ஊரு சனமெல்லாம்
.....வீதியில நா(ன்)போனா
பேரு மாத்திவச்சி
.....பேசிட்டு போறாங்க

ஒடம்புல உசுருவச்ச
.....ஒருபொண்ணா எனப்படச்ச
கடவுள் எனக்குஒரு
.....கணவன படைக்கலயா ?

கல்யாண உண்டியலில்
.....செல்லாத காசானேன்
செல்லாமா போனதால
..... சவக்குழித் தூசானேன்

எங்கப்பன் எனக்காக
.....சேத்துவச்ச பணம்வச்சி
தங்கச்சி வாக்கப்பட
.....தடபுடலா செஞ்சாச்சி

நாலஞ்சி கொழந்தைகள
.....நா(ன் )சொமந்து பெறநெனச்ச
காலம் எனக்குவெறும்
.....கனவா போயிருச்சி

அயோத்தி கலவரமா
.....எம்மனசு மாறிருச்சி
சுயேட்சை வேட்பாளனா
.....என்வாழ்க்க ஆயிருச்சி

அவமானச் சந்தையில
.....அடகுவச்ச பொருளாட்டம்
எவனும் என்னவந்து
.....எட்டிக்கூட பாக்கலயே !

ஒலகத்துல நா(ன்)பொறந்து
.....ஒழுக்கமா நா(ன்)வளந்து
பலநாள் காத்திருந்தும்
.....பொண்ணு என்னக் கேக்கலயே !

ஆசப் பட்டதெல்லாம்
.....அடையாம போனாலும்
வேசம் போடாத
.....இருட்டு வெளிச்சம்நா(ன்)

சுயநல கூட்டத்துல
.....சேராம சுத்திவரும்
வயசுக்கு வந்தஒரு
.....வயசான குழந்தைநா(ன்)

முத்து நகையாட்டம்
......மொகம்வச்சி சிரிச்சாலும்
பைத்தியமா எனநெனச்சி
.....பயங்காட்டி போறாக

ஒத்த மயிலாட்டம்
.....உசுரோட பறந்தாலும்
செத்தவளா எனநெனச்சி
......சீரழிக்க வாராக

நல்ல சேதிகள
.....ஏங்கிட்ட சொல்லாம
பொல்லாத சேதிகள
.....புரியும்படி சொல்வாக

அம்மா அப்பனுக்கு
.....கொள்ளிபோட நானிருக்கேன்
எம்பொணத்த கொள்ளிபோட
.....யாரு வருவாக ?

எழுதியவர் : ஜின்னா (20-Aug-14, 12:27 am)
பார்வை : 117

மேலே