மாத கடைசி

5 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி .
50 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி
மாத கடைசி என்றால் மாத்திரை விழுங்க பயப்படும்
குழந்தை போல தான் நாம்!!

மளிகை, வீட்டு வாடகை, வாங்கிய கடனுக்கு வட்டி என எல்லாம் போக மாதத்தின்
முதல் வாரம் மட்டுமே கையில் பணமிருக்கும்
மற்ற மூன்று வாரமும் எதையும் தாங்கும் மனமிருக்கும்.

கையேந்தி பவனும் கடவுளாய் தெரியும்
என்றோ காணமல் போன சில்லரை அருமை அன்று புரியும்

கடவுள் பக்தி அதிகம் இல்லை
ஆனாலும் வெள்ளி,சனி,திங்கள் என ஒரு வாரத்தில்
பல ஒரு பொழுதுகள் இருக்கும்
மாத கடைசி

பிறந்த நாள் கூட பிடிக்கவில்லை மாத கடைசியில் வருவதால்!
நண்பனின் திருமணத்திற்க்கு அழைப்பு இருந்தும் போகவில்லை
வெறும் கை வலி தருவதால்!!

பசித்த வயிற்றை
சில நேரத்தில் தேநீரும் பல நேரத்தில் தண்ணிரும் நிரப்பும்
பிடிக்கவில்லை என்றாலும் வீட்டுசமையலில் ரசமே அதிகம் இருக்கும்
மாத கடைசி

வீட்டில் முதலில் காபியில் சர்க்கரை அளவு குறையும்!
பின் காபியின் அளவு குறையும்
மாத கடைசி

மாத கடைசியில்
விலை கேட்டு விட்டு
அடுத்த மாதம் வாங்கி கொள்ளலாம் என விட்டு வந்த
ஆசை பட்ட அந்த சட்டையை வழியில் யாரோ அணிந்து செல்லும் போதுதான் வலியின்
ஆழம் தெரிகிறது

இல்லை என்று சொல்லமாட்டான் என நம்பி கடன் கேட்கும் நண்பனிடம் எப்படி நான்
சொல்வேன் மாத கடைசி என்று

மாலை நேரத்தில் அப்பா எதையாவது வாங்கி வருவார் என வாசலில் ஏங்கி
காத்திருக்கும் என் பிள்ளையிடம் எப்படி சொல்வேன் மாத கடைசி என்று.

அம்மா ஆசைபட்ட புடவையும தங்கை கேட்ட கைபேசியும் வழக்கம் போலவே அடுத்த
மாதத்திற்க்கு இலக்கு நகர்ந்தது
மாத கடைசி

இறைவா ஆடம்பர வாழக்கை வேண்டாம்!
அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம்!
ஆடியும்,BMWயும் வேண்டாம்
உழைப்புக்கு ஏற்ற பிழைப்பு கொடு!
மாத கடைசியில் யாரிடம் உதவி கேட்காமல் உதவி செய்யும் அளவுக்கு
உயர்வை கொடு..

எழுதியவர் : பிரபாகரன் (20-Aug-14, 6:37 am)
சேர்த்தது : பிரபாகரன் செ
Tanglish : moitha kadasi
பார்வை : 257

மேலே