அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
அள்ளித் தந்த வானம்
சொல்லித் தந்த பூமி
துள்ளித் துள்ளிப் போகும் மேகம்
கள்ளமின்றி காயும்
கொள்ளை கொண்டு போகும்
வெள்ளி வண்ண வான தீபம்
கொல்லை எங்கும் பூக்கும்
முல்லைப் பூவின் வாசம்
தொல்லை இல்லா மேலும் இன்பம்
வெள்ளை நீரின் மேலே
வெள்ளக் காடு போலே
அல்லிப் பூவும் நீரை மூடும்
முள்ளைப் போர்த்திக் கொள்ளும்
கள்ளிச் செடி தோட்டம்
கிள்ளி உந்தன் கையை தீண்டும்
பள்ளிக் கூடம் செல்லும்
பிள்ளைக் கூட்டம் போலே
உள்ளம் இங்கே வேண்டும் வேண்டும்
தெள்ளத் தெளி வாக
செல்லும் நீரைப் போல
வெல்லும் வரை ஓட்டம் என்றும்
வில்லைப் போலே வளைந்து
நெல்லை உழும் உழவர்
எல்லாம் பெற்று ஏற்றம் வேண்டும்
எல்லை இல்லா வாழ்வும்
சொல்லித் தரும் யாவும்
மெல்ல உந்தன் எண்ணம் மாற்றும்
அல்லல் இன்றி நாமும்
செல்லும் பாதை யாவும்
வெல்லம் போலே நாளும் இன்பம்!!