அறியப்படாத மதுரை நூல் ஆசிரியர் ந பாண்டுரெங்கன் பேச 9865102051 நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

அறியப்படாத மதுரை !
நூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட். 41-B, சிட்கோ இண்ட்ஸ்ட்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர்,
சென்னை-600 098. விலை : ரூ.165. பேச : 044-26359906, 26251968, 26258410

நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் அவர்கள் மாவட்ட நூலகராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார். கலை, இலக்கிய பெருமன்றத்தின் மதுரைக் கிளையில் பொறுப்பு வகித்து இலக்கியப் பணியாற்றி வருகிறார். ‘அறியப்படாத மதுரை’ என்ற தலைப்பே அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. எல்லோரும் அறிந்த மதுரை பற்றி பலரும் அறிந்திடாத பல அரிய தகவல்களின் பெட்டகமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள். நூலை மிகத்தரமாக பதிப்பித்துள்ள என்.சி.பி.எச். நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள்.
இந்த நூலை “தலைகளிலும், தோள்களிலும் என்.சி.பி.எச். நூல்களைச் சுமந்து பள்ளித்தலமனைத்தும் பரவச் செய்து வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு” என்று காணிக்கை ஆக்கி இருப்பதிலேயே நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் வித்தியாசப்படுகிறார். ந. என்பது அவரது முன்னெழுத்து, தந்தையின் பெயருக்காக எழுதப்பட்டாலும் ‘அறியப்படாத மதுரை’ என்ற நல்ல நூலின் ஆசிரியர் என்பதால் ந. பாண்டுரங்கன் என்றும் பொருள் கொள்ளலாம். மாவட்ட நூலகராக இருந்த போது வாசித்த நூல்கள், இந்த நூல் எழுத உதவி உள்ளன. வாசிப்பை நேசித்தால் எழுத்தாளர் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு கவிஞர் ந. பாண்டுரங்கன். மதுரையை சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு போகாது என்பார்கள். ஆம். ரம்மியமான ஊர் மதுரை. நான் மதுரையில் பிறந்தவன். எனக்கும் பிறந்த மண் பற்று உண்டு. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பிறந்த ஊர் சேலம் என்றாலும் அவருக்கு பிடித்த ஊர் மதுரை. பல்வேறு சிறப்புகள் பெற்ற மதுரையைப் பற்றி பல புதிய தகவல்களை நூலைல் எழுதி உள்ளார். நேரடியாக பல இடங்களுக்கு சென்று பார்த்து, அறிந்து, ஆராய்ந்து, எழுதி உள்ளார் . பாராட்டுக்கள்.
மதுரையைப் பற்றி ஆய்வு நூலாக உள்ளது. 10 தலைப்புகளில் எழுதி உள்ளார்கள். 1. ஆலவாயன் தம்பிரான் கோவில் (மீனாட்சியம்மன் கோவில்) பற்றிய விரிவான கட்டுரை கோவிலை வாசகர்களின் மனக்கண்ணில் படம் பிடித்து காட்டுகின்றது. இந்த நூல் படித்துவிட்டு அல்லது கையில் வைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோவில் சென்று கலைகளை ரசிக்கலாம். மிக விரிவாகவும், விளக்கமாக எழுதி உள்ளார். 'உங்கள் நூலகம் ' மாத இதழில் கட்டுரைகளாக வந்த போதே படித்து விட்டு நூலாசிரியரைப் பாராட்டினேன். மொத்தமாக தொகுத்து நூலாகப் படித்த போது மனம் மகிழ்ந்தேன். கோவில் பற்றி மட்டுமல்ல, திருவிழாக்கள் பற்றி, தெரு பெயர்களுக்கான காரணம் பற்றி சுவைபட எழுதி உள்ளார்.
நூலில் இருந்து சில துளிகள் :
“தெருக்களும் வீதிகளும் வெறும் பூகோள அடையாளங்கள் மட்டுமல்ல, மக்களின் பண்பாட்டையும் கலை உணர்வையும் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்துகிற சரித்திர சின்னங்கள். தெருக்களில் எழுகிற புரட்சிகள் தான் தேசங்களின் எழுச்சிக்கான ஆணிவேர். தெருக்களின் ஒருங்கிணைப்பு தான் ஊர். ஊர்களின் இணைப்பே மாவட்டங்கள். மாவட்டங்களின் எழுச்சியே மாநில எழுச்சி. மாநிலங்கள் இல்லையேல் தேசம் இல்லை. எனவே தெருக்களை நேசிப்போம்”.
மதுரையின் நாட்டார் தெய்வங்கள் பற்றி தெரியாத செய்திகள் சேகரித்து விரிவாக எழுதி உள்ளார்கள். நான் வாழ்ந்து வரும் வடக்கு மாசி வீதி பற்றிய தகவலும் நூலில் உள்ளது. “ஆயிரம் வீடுகளைக் கொண்ட யாதவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில் இராமாயணம் படித்து விரிவுரை சொல்லிய இராமாயணச்சாவடி இப்பகுதியில் தான் உள்ளது. பெருந்தெய்வம் திருமால் பற்றிய அழகர் வர்ணிப்புப் பாடலை இப்பகுதிப் பெரியவர்கள் இசையோடு பாடக்கேட்பது மனதிற்குக் கிளர்ச்சியூட்டுவதாகும்”. இன்றும் இராமாயணச்சாவடி என்ற பெயரிலேயே சாவடி உள்ளது.சித்திரைத் திருவிழாவின் போது ஒருநாள் இந்த சாவடிக்கு கடவுள் சிலைகள் கொண்டு வருவது வழக்கம் .
“சீர்திருத்தக் கிறித்தவரும் மதுரையும்” கட்டுரையில் அமெரிக்கன் கல்லூரி உருவான வரலாறு அன்றைய மதிப்பு ரூபாய்கள் மிஷன் மருத்துவமனை, மதுரை Y.M.C.A. பல்வேறு பள்ளிகள் உருவான வரலாறு, மதுரையை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் போலவே துணை நின்ற நூல்களின் பட்டியலையும் இறுதியில் எழுதி இருப்பது நூலாசிரியரின் அறிவு நாணயத்திற்கு சான்றாகும்.
“கத்தோலிக்க கிறித்துவத்தில் மதுரையின் பங்கு” கட்டுரையில் இராபர்ட்-தெ.நோபிலி, புனித அருளானந்தர், வீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கி ஆகியோர் பற்றிய வரலாறு ஆண்டுகளுடன் மிகத்துல்லியமாக எழுதி உள்ளார். கல்விப்பணி பற்றியும் எழுதி உள்ளார்.
மதுரையின் பெருமையைப் பறைசாற்றும் அற்புத நூல். இந்த நூல் படித்தால் மதுரையில் பிறந்ததற்காக மதுரையில் பிறந்த அனைவரும் பெருமை கொள்ளலாம். ஒரு காலத்தில் அப்படி இருந்த மதுரை இன்று இப்படி உள்ளதே என்று மனம் வருந்தி மதுரையை சீரமைக்க உதவிடும் நூல். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் மதுரையில் நடந்த நெசவுத் தொழிலை எப்படி நசித்தது என்ற விபரமும் நூலில் உள்ளது.
இஸ்லாமியர்கள் பற்றியும் கட்டுரை வடித்துள்ளார். “நூற்றாலை மறந்த ஆலைகளும் நூலிழை அறுந்த வாழ்வுகளும்” கட்டுரையில் பல ஆலைகள் மூடப்பட்ட ஆலைத் தொழிலாளிகளின் வாழ்க்கை போராட்டமானதை எழுதி உள்ளார்.
மதுரையின் புகழ்பெற்ற திரையரங்கம் “சிடிசினிமா வாகன நிறுத்தமாகவும், பேன்சிப் பொருட்கள் விற்பனை அங்காடியாகவும் மாறி விட்டது” இப்படி மதுரையின் பல்வேறு தெருக்களையும், கட்டிடங்களையும் அன்றும் இன்றும் என்று ஒப்பிட்டு ஆய்வு நூலாக வடித்துள்ள நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (20-Aug-14, 7:35 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 206

சிறந்த கட்டுரைகள்

மேலே