பயின்றன என்று இகழத் தகாதன - ஆசாரக் கோவை 84
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனவென் றெண்ணி
இகழின் இழுக்கந் தரும். 84 ஆசாரக் கோவை
பொருளுரை:
புற்றில் வாழும் பாம்பு, அரசர், நெருப்பு, குகையில் தங்குகின்ற சிங்கம்
ஆகிய இவை நான்கையும் இளையன என்றும், எளியன என்றும், பழகின
என்றும் நினைத்து இகழ்ந்தால் துன்பத்தைத் தரும்.
கருத்துரை: பாம்பு, அரசன், நெருப்பு, சிங்கம் இந்நான்குடன் நெருக்கமாயும்
எச்சரிக்கை இல்லாமலும் பழகலாகாது.