+அழகான வாழ்க்கை ஆனந்தமாய் இரண்டு+ போட்டிக்கவிதை

மயிலாட மனம்துள்ளி தோகை விரித்ததுண்டோ
வெயிலாடும் கேணிமேட்டில் தலை நனைத்ததுண்டோ
கயலாடும் குளத்துநீரில் நீந்திக் களைத்ததுண்டோ
ரயிலோடும் தடம்தன்னில் நடை பயின்றதுண்டோ
ஒயிலாட்டம் ஆடவீட்டில் முயற்சி எடுத்ததுண்டோ

குயிலக்கா குரல்தேடி வனம் அலைந்ததுண்டோ
துயில்கின்ற நேரம்முழுதும் கவி புனைந்ததுண்டோ
கயிலாசம் எப்படியிருக்கும் கற்பனை கண்டதுண்டோ
பயிர்வளரும் வேகம் காண காத்திருந்ததுண்டோ
வயிறார உண்ணும்முன்னே நன்றி சொன்னதுண்டோ

சிறுபிள்ளை கதைசொல்ல கேட்டு ரசித்ததுண்டோ
உருவில்லா மனசாட்சியுடன் பேசி மகிழ்ந்ததுண்டோ
பருவப்பெண் கேலிசெய்ய வெட்கம் கொண்டதுண்டோ
பெருமழையில் உடல்நனைய குளியல் போட்டதுண்டோ
தருஉச்சி ஏறிநின்று வானம் தொட்ட‌துண்டோ

நறுமணப்பூ தரும்மணத்தை முழுதாய் தின்றதுண்டோ
குருநில மன்னனாய்மாறி வீட்டிலாட்சி புரிந்ததுண்டோ
கருவுருவம் இருட்டில்கண்டு ஓடி ஒளிந்ததுண்டோ
திருவிளையாடல் தருமியாகி வசனம்பேசி பார்த்ததுண்டோ
மறுபடியும் குழந்தையாய்பிறக்க ஆசை கொண்டதுண்டோ

ஆயிரம்பேர் முன்னே சந்தோசஆட்டம் போட்டதுண்டோ
ஞாயிறுநாள் முழுதுவதுமே தூங்கி கழித்ததுண்டோ
தாயின்காலில் ஒருமுறையேனும் விழுந்து எழுந்ததுண்டோ
சேயாய்மாறி பெரியோர்களுக்கு உண்மையாய் உபசரித்ததுண்டோ
ஆயக்கலைகள் அறுபத்துநான்கை மனனம் செய்ததுண்டோ

உதவிசெய்த மகிழ்ச்சியில் உண்ணாமல் இருந்ததுண்டோ
பதவிபெற உதவியோர்க்கு நன்றி சொன்னதுண்டோ
சதமெடுக்கா மக்களோடும் சிரித்து பேசியதுண்டோ
பதறாமல் முடிவுகளை சேர்ந்து எடுத்ததுண்டோ
எதுவேனும் சிறிதும் உண்டெனிலுங்கள் வாழ்க்கையானந்தமே!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Aug-14, 5:20 pm)
பார்வை : 110

மேலே