பசி
![](https://eluthu.com/images/loading.gif)
எதைத் தின்று தீர்த்தாலும்
தீர்வதேயில்லை
என் பசி !
பார்ப்பன , நுகர்வன
ரசிப்பன , கேட்பன
என
அனைத்தையும்
உண்டு களித்தாலும்
வேளப்பசி கொண்டலையும்
மனது
சோளப் பொறி கொரித்த
அகோரத்துடனேயே
அலைகிறது !
எந்த
காஸ்யபனின் கனியையும்
எட்டி உதைத்ததில்லை
ஆயினும்
காயசண்டிகை யென
அலைகிறது மனது
அட்சயமிருக்கும்
கரம் தேடி !
மனசாட்சியைத் தொலைத்த
நாட்களிலெல்லாம்
கொடு மிருகமென
பசியின் கொம்புகள்
முளைக்கிறது !
எதையேனும் தின்று
தீர்க்கவேண்டுமென்ற
கொடும்பசியில்
நிலைகொள்ளாமல்
தவிக்க விடுகிற
தவறுகளின் அலாரம் -
மனதின் மூலைகளிலெல்லாம்
நூலாம்படைகளாய் அடர்ந்து
தொழு நோயென
கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்துச் சுவைக்கிறது
ஆழ்மனத்தின் ரணங்களை !
நிஜங்களின் சடலங்கள்
புதைக்கப்பட்ட
இடங்களெல்லாம்
ராட்சசர்களின் வாழ்விடங்களென
மாறிப்போக -
தொடரும் கூக்குரல்களின்
அலறல்கள்
கெஞ்சல்களின் குரல்களை
நெரித்து
பாவங்களை பந்தியிலிட்டு
உண்டு தீர்க்கிறது !
பாவத்தை உண்ணுகையில்
தொண்டைக் குழி நெருக்கும்
மனசாட்சி விக்கலின்
உறுத்தலில் -
கண்ணீரை
தண்ணீராய் பருகி
பாவத்தை உள்ளிறக்கும்
கொடும்பசியை
என்ன செய்ய ?