குட்டிப்பாப்பா அழுகைக்கான காரணங்கள்

குலதெய்வத்துக்கு
நேர்ந்து
மொட்டை போடப்பட்ட
குட்டிப்பாப்பா
சட்டென்று
தலையில் கைவைத்து
எதையோ இழந்த உணர்வில்
அழுகிறாள் !

காரணம் அறியாமல்
' தோ தோ தோ "
என்கிறாள் தாய் !

கிலுகிலுப்பை
காட்டுகிறான்
தகப்பன் !

காக்கா பாரு
காக்கா பாரு
என்று
வாசல் வந்தமர்ந்த
காகம் காட்டுகிறாள்
பாட்டி !

" எறும்பு கிறும்பு
கடிச்சிருச்சா
பாருங்க "
என்று
அங்கலாய்க்கிறார்
தாத்தா !

இன்னுங்கொஞ்ச நாளில்
மொட்டை மண்டையில்
முடி முளைக்கப்பெற்ற
குட்டிப்பாப்பா
சட்டென்று
தலையில் கைவைத்து
தன்னில் புதிதாய்
முளைத்துவிட்ட
ஒன்றிற்காக
இதே போல் அழக்கூடும் !

அப்போதும்
அதே
தோ தோ தோ வும்,
கிலுகிலுப்பையும்,
வாசல் வந்தமரும்
காக்காயும்,
கடிக்காத எறும்பும்
துணைவரலாம்
குட்டிப் பாப்பாவின்
அழுகை நிறுத்த ........!

=======================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (30-Aug-14, 7:13 pm)
பார்வை : 83

மேலே