விழியதிகாரம் - 3- சந்தோஷ்

விழியதிகாரம்
--------------------------------
முதல் சந்திப்பு


-----------------------------
நதிக்கரையோரம்
அழகிய புல்வெளித்தளம்
ஒரு புல் மீது
துயில் கொள்ளும்
புது ரக பனித்துளி...!

நானும் கவிஞனே!
இலக்கியசெறுக்கில்
வைரமுத்துவின் வேஷத்தில்
வெள்ளை உடையணிந்து
அவனின் நடையளந்து
வராத வார்த்தைகளை
தட்டி கொட்டி
கேட்டிருந்தேன்
எனது மேலவை
உறுப்பினர் மூளையிடம்..!

வருகிறது வருகிறது
வந்தே விட்டது
எனக்கான கவிதை

இதோ வருகிறாள்.!
என் விழியதிகார நாயகி!

எனக்கான வானம்
சந்தோஷ மழை பெய்திட
எனக்கான மேகம்
ஆனந்த இடி முழங்கிட

முல்லைப்பூ வடிவத்திலான
வாசமுள்ள வசந்தமழை
குறும்புத்தனமாய் பெய்திட

வந்தாள்.. வந்தாள்
வந்தேவிட்டாள்..
என் அருகில்..!

“ ஹாய் ஹவ் ஆர் யூ“
ஆ..... !!!
தமிழச்சியிடம்
ஆங்கில நெடி...!

கட்டழகி பேரழகி -அவள்
விழியுருட்டி மனமுருகி
கைநீட்டி நலம் விசாரித்திட...!
உனக்கு தேவையா
இங்கு தமிழ்ப்பற்று..?

இதயத்திலிருந்து
ஓர் எச்சரிக்கை நச்சரிப்பு..!

முதல் முறையாய்
என் விழியில்
ஏறியது ஒரு காந்தசக்தி..!
பதறிய கையில் தைரியமூட்டி
நீட்டினேன்...................!
பற்றினாள்...........................!

பற்றிக்கொண்டது எங்கள் உறவு..!
இரு ஐ விரல்கள்
சங்கமித்தால்
இச்சைக்கொண்ட
இரு பாம்புகளின்
ஆனந்த நடனம்தானே....!

பிரியப்பட்டு பிடித்துகொண்ட
விரல்கள்
பின்னிப்பிணைய
என் விழியில்
ஈர்க்கப்பட்டிருக்கும்
அவளின்
கருவிழிகள்..!

உற்று நோக்கினேன்
அவளின் இருவிழிகளை..!
சற்றும் மிரளாமல் என்னை
சளைக்காமல் மிரட்டியது
அவளின் வேல்விழிகள்
புது காதல் மொழியில்..!
--------------------------------------------


என் கவியோடு
இவ்விழியதிகார நாயகி
தொடர்வாளா ?
இல்லை
தொலைந்துவிடுவளா?



(விழியதிகாரம்- தொடரும்)


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (2-Sep-14, 4:53 am)
பார்வை : 135

மேலே