உயிரின்விலை
குடும்பத்தில் பெண் ஒருவள்
கருக்கொண்ட செய்தி கேட்டு
அக்குடும்பத்தில் நிலவும்
பத்துமாத குதூகலம்
நீ அருகிருந்து கண்டதுண்டாே
தாய் பிரசவவலியில் துடிக்க
வெளியே தந்தை
அடையும் பதைபதைப்பு
நீ நேரிருந்து பார்த்ததுண்டாே
மதலை சீராட்டி அதன்
மழலையிலே தனை மறக்கும்
மாதாவின் மகிழ்வை நீ
மறைந்திருந்தேனும் கண்ணுற்றதுண்டாே
தன் பிள்ளை வீடு திரும்ப
சற்றே தாமதமானாலும்
மற்றவை முற் றும் மறந்து
வழிமேல் விழி வைத்து
காத்திருக்கும் தாயின்
தவிப்பதனை
தரணியில் நீ கண்டதுண்டோ
நோயில் மகன் படுத்தால்
நலமாகும் நாள் வரையில்
நோன்பிருக்கும் அன்னைதனை
நீ அவனியிலே கண்டதுண்டோ
நூறுபேர் பயணித்த பயணிகள் பேருந்தில்
நீ குண்டுவைக்கும் முன்பாக
இதில் ஏதேனும் ஒரு நிகழ்வை
நீ கண்டிருக்கக்கூடாதா
உயிரின் விலை என்னவென்று
உன் உள்ளம் பட
அது உனக்கு உரைத்திருக்கக்கூடாதா
கரபக்கெ