வீழ்ந்தது போதும் வாழ்ந்திடு தோழா

விதியோடு விளையாடு
விதை போல முளை போடு
மதியோடு சதிராடு
மனமொத்த அன்போடு ....!

கருவுக்குள் குழந்தை போல்
கண்மூடிக் கிடக்காதே !
மான் போட்ட குட்டியாட்டம்
துள்ளித் துள்ளி குதிக்காதே !

மழை பெய்தா வெள்ளம் பாரு
சகதிக்குள்ள நம்ம வாழ்வு
சகதிக்குள் வாழ்ந்தாலும்
மனம் மட்டும் வெள்ளை பாரு
மனம் வெள்ளை அதனாலே பெரும் தொல்லை !

அஞ்சுக்கும் பத்துக்கும்
பஞ்சாக பறக்குறோம்
பணக்கார முதலாளியை
தோளில சுமக்குறோம்...!

மூலைக்கு மூலை நின்னு
வேலை வேண்டி தவிக்கிறோம்
மூளைக் கெட்டு மூளையை
முதலாளியிடம் அடகு வைக்கிறோம் !

பொழுதான போதும் பாரு
போதையில மிதக்கிறோம்
தெருவோரம் கிடக்கிறோம்
மதுவால தானே மதிகெட்டு
வாழ்க்கையை இழக்கிறோம் !

மனசாட்சியை தொலைச்சிப்புட்டு
மனுசனை தினம் தேடுறோம்
மனசார சொன்னா கூட
மதிக்காத உலகம் போடா !!

சரித்திரத்தை திருப்பி பார்க்க
எவனுக்கும் சக்தியில்லையோ !!
தரித்திரம் பிடிச்சவனால்
தத்தளிக்குது மனசும் தாண்டா !

பத்துக்கு வேலை செய்து
அஞ்சைத்தான் கையில் வாங்கி
பத்தாத செலவை எண்ணி
வட்டிக்கும் கடனை வாங்கி
சேட்டுக்கு சலாம் போட்டு
படித்த படிப்பையும் மறக்குறோம் !

விடிந்தும் விடியாத வாழ்கையில
விபசாரம் போல தரகர் கூட்டம்
திறமைக்கு மதிப்புமில்லை
திருடனைத் தான் தலைவனென்போம்
கூஜவா தூக்கிகிட்டு ராஜானு நீயும் சொன்னா
உலகும் தான் சிரிக்குமடா
உன் உள்ளம் கூட உன்னை இகழுமடா !

உழைப்பாளி மூளையை
பணத்தால சலவை செய்து
வயிற்றில அடிக்கிறான்
மூளை வளராம மளிக்கிறான்
முதலாளி பெருகி நாட்டில்
மூட்டை மூட்டையா பணத்தை
பதுக்கி வைத்து சிரிக்கிறான்...!!

அறிந்தும் அறியாத உழைப்பாளி
பல்லக்கு சுமக்குறான்
அட விளங்காத உழைப்பாளிக்கு
வேதம் சொன்னாலும் சரி
வேண்டியவன் சொன்னாலும் சரி
வேதனைத் தான் மிச்சமப்பா ...!

இந்நிலை மாற உன்மனதை மாற்று
அறிவுகண்ணை திறந்து
அடிமைகளை காத்து
அன்னை மண்ணை அரவணைக்க
அன்னியதேசத்தை புறக்கணித்து
அறிவதனை தாயகத்தில் செயலாற்று!!

ஓடி ஒளிந்தது போதும்
ஓடவிடு பண முதலைகளை
சாதியம் பேசும் சாத்தானை
சாட்டையடி கொடுத்து விரட்டு !
ஊழல் பெருச்சாளிகளை
தீ வைத்து கொளுத்து !
தீரமும் திடமுடனும் நீ நின்றால்
திறமாய் வெல்வாய் வா !

எழுதியவர் : கனகரத்தினம் (6-Sep-14, 11:20 pm)
பார்வை : 71

மேலே