பல்சுவை வெண்பா -2

திடீரென அங்குமிங்கும் எழுதிய ,பெற்ற வெண்பாக்களை தொகுக்க ஆசை வந்தது... தவற விட எண்ணமில்லை .....உங்கள் பார்வைக்கு....

மரணத்தின் முகம் என்ற நண்பர் அதினட அவர்களின் தலைப்பில் நான் எழுதியது
************************************************************************************************************
மன்னர்க் கதுவே! மறுப்பின்றி எல்லோர்க்கும்
முன்வந்து கொல்லும் முடிவதுவே!-என்னதான்
சேர்த்து செயித்து செகமெங்கும் கொண்டாலும்
ஈர்த்துக்கொண் டேகும் இறப்பு.

அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்கள் பற்றி...
***************************************************************
என்பேரைக் கொண்டவர் பொள்ளாச்சி ஊர்பேராம்
தன்னேர் இலாதத் தனிகவிஞர் - பொன்போல்
அவர்வாழ்த்த பூரித்தேன் அன்பில் திளைத்தேன்
கவர்ந்த கருத்து களிப்பு.

அம்மா சியாமளா அவர்களின் தாவணியில் வந்த தாரகை பார்த்து...
*******************************************************************************************
வெட்கமே ஆபரணம்! வேல்விழியாள் பூவிதழில்
சிக்கனமாய் செய்யும் சிரிப்பினிலே - அக்கணமே
சிக்கித்தான் கொள்ளும் மனமும் சிறகடிக்கும்
திக்கவும் வைக்கும் சிலை!

அம்மா சியாமளா அவர்களின் மரங்கள் கவிதை பற்றி ...
*******************************************************************************
மரங்களைப் பாடி மகத்துவம் சொல்லி
இரங்கிட வைத்தாய் இதயம்- கிரங்கியே
சுற்றி இருக்கும் சுகந்த மரங்களுன்னைப்
பற்றி படிக்குதே பாட்டு.

அம்மா அவர்களின் மற்றுமோர் வெண்பா தொகுப்பு பற்றி...
**********************************************************************************
ஆகா! அடடா!அருமை !அழகுதான்!
பாகாய் இனிக்கும்! படைப்பினில்- வாகாய்
எழுதிய தோழி சியாமளா என்பாள்
பழுதற வாழ்வாள் படி!

இது அம்மா அவர்கள் எனக்காக எழுதிய வெண்பா..
**********************************************************************
அடடா அடடா அபியுந்தன் வெண்பா
சுடச்சுட லட்டாய்ச் சுவைக்கும் -கடல்கடந்து
போனாலும் செந்தமிழில் பூத்திடு முன்கவியும்
தேனாய் வடிந்திடு தே ! -சியாமளா ராஜசேகரன்

அதற்கு நான் கொடுத்த பதிலும் வாழ்த்தும்...
****************************************************************
எல்லாம் இறைவன் எனக்களித்த நற்பேரே
நல்லாள் தமிழ்த்தாய் நயமுடனே- கல்லான்
எனக்கீந்த சொல்நயத்தை ஏற்றிப் புகழும்
உனக்கீவாள் உண்மை உயர்வு!

தம்பி விவேக் பாரதியின் ஆசிரியர் தின கவிதை பார்த்து..
*******************************************************************************
அருமை கவிதை அகமகிழ்ந்தேன் உன்னைப்
பெருமை படுத்திப் புகழ்வேன்-அருவியென
அள்ளித் தமிழ்க்கவிதை அன்றாடம் நீஎழுது
பள்ளி பெருமை பட...

தம்பி விவேக்பாரதி என்னை பற்றி...
**********************************************************
அப்பாடி அற்புதம்தான் அண்ணாநின் பாக்களெல்லாம்
இப்பாரில் ஈடில்லா நற்பாக்கள் - எப்போதும்
இஃதைத் தொடர்வீர் வெண்பாக்கள் நம்மரபில்
எஃகணித்த ஆயுதந்தான் பார் !

நான் அளித்த பதில் வெண்பா ..
*********************************************
அண்ணா எனவழைத்தாய் ஆனந்தம் என்தம்பி
உன்னால் தமிழும் உயர்வுபெறும்- எந்நாளும்
வெண்பா எழுதிடுவோம் வேரூன்ற நம்தமிழை
கண்போல் கருதிடுவோம் வா.

எழுதியவர் : அபி மலேசியா , சியாமளா ராஜச (9-Sep-14, 5:12 pm)
பார்வை : 119

மேலே