விடியலை யார் இனி எழுப்புவது

வைகறை புலர்ந்தும்
அந்தக் குடிசை வீட்டுச் சேவல்
கொக்கரிக்க மறுத்து
கூடையின் பின்னல்கள் வழி
கொண்டை உயர்த்தி வெளியே பார்த்தபடி
ஒடுங்கிய கால்களை
நீட்டிக்கொள்ளும் முனைப்பிலும்
வண்ணச் சிறகுகளை
படபடக்க தயார்படுத்திக்கொண்டும்
காத்துக்கொண்டிருக்கின்றது

விடிவெள்ளிக்கு முன் ஒளிநிரப்பும்
அந்த கொல்லைப்புறத்து
விளக்கின் வெளிச்சம்
அன்று விழி நிறைக்கவில்லை
கதவுகள் தாழ்திறக்கும் சத்தம்
செவிகளுக்குப் புலப்படவில்லை
வீட்டின் காலைப்பனிகள்
துவங்கியதாகத் தெரியவில்லை

தனக்குமுன் விழித்தெழும்
மூத்தாட்டி அன்று
விடியலை எழுப்ப மறந்துவிட்டாளோ?
உதயம் அதுவாக எழுகின்றதே?

இப்பொழுது கொக்கரிக்கவா
அல்லது காத்திருக்கவா
என்னும் குழப்பம்
அதன் பார்வைகளை நிறைக்கின்றது

என்னை எழுப்பும் அவள்
தன்னையே எழுப்பாமல் போய்விட்டாள்
என்னும் உண்மை
அழுகுரல் ஒன்றினில் தெரியவர
இடைவிடாது வேகமாய் வெளிவரும்
அதன் கொக்கரிப்பினில்
ஒருவித ஏக்கம் தென்படுகின்றது

அவள் விட்டுச்சென்ற அப்பணியை
அன்றுமுதல் தான் தொடர ஓர் உறுதிபூண்டது...!

எழுதியவர் : வெ கண்ணன் (12-Sep-14, 12:54 pm)
சேர்த்தது : வெ கண்ணன்
பார்வை : 540

மேலே