கல்வி விளையாட்டு

கல்வி விளையாட்டு


பள்ளிப் பிள்ளைகளும்
காதல் விளையாட்டில்
காண்பதும் கேட்பதும்
உண்மையாய்த் தெரிவதால்.

கருவில் மிதக்கும்போதே
ஊடகத் தாக்கத்தை
உள்வாங்கிக் கொண்டு
திருவாய் மலர்ந்தவர்கள்.

உலகறிந்த நாள்முதலாய்
எங்கெங்கு பார்த்தாலும்
காதல் களியாட்டமெல்லாம்
கவர்ந்திழுக்கும் காட்சியாக

படிப்பதற்கு நேரமில்லை
மடிக்கணினி விளையாட்டும்
செல்பேசி வீண்பேச்சும்
மடித்துவிடும் அவர்பொழுதை.

பேட்டை ரவுடிகளின்
குற்றம்சார் சிந்தனைகள்
காணொலிப் படக்கதைகள்
உருப்பட வழிகாட்டும்.

குறைந்த உழைப்பில்
நிறைந்த இலாபம்தரும்
தொழில்களைப் போலவே
கல்வியும் மாறியதால்

தேர்ச்சிவிகிதம் விண்ணேற
கல்வித்தரம் பின்னிறங்க
பயனற்ற பட்டங்களைப்
பெற்றவரும் கற்றவரே.

பொறியியல் படித்தவரில்
பணிக்குத் தகுதியுள்ளோர்
இருபது சதவீதமாம்!
மற்றவர் என்னாவார்?

கலையறிவியல் கற்றவர்கள்
நூற்றுக்குப் பத்துப்பேர்
உருப்பட வழிஉண்டாம்!
மற்றவர் எங்குசெல்வார்?

தரமறிந்து பார்க்காமல்
மனப்பாட விடைகளுக்கு
மதிப்பெண்ணை வாரிவழங்கி
கல்வியைக் கசடாக்குவதா?

ஒழுக்கம்தான் கல்வியின் அடித்தளம்
மதிப்பெண் என்பது மேற்கூரை
அடித்தளம் இல்லா மவுலிவாக்கம்
கல்வியில் கட்டுவது சரியாகுமா?

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (12-Sep-14, 12:53 pm)
பார்வை : 433

மேலே