என்னமோ போங்க ஒண்ணுமே புரியல தம்பி
"தம்பி தம்பி கொஞ்சம் நில்லுப்பா..."
"என்னங்க அக்கா?"
"அது ஒன்னும் இல்ல தம்பி. நாங்க எல்லாம் வருஷா வருஷம் பாதயாத்திரையா நடந்து கோவிலுக்கு போவோம்.
அப்படி போகும் போது எங்களுக்கு வழி நெடுக துணையா வர்றது இந்த மரங்கள்தான்....
மழை அடிச்சாலும் வெயில் அடிச்சாலும் தாய் வீடு மாதிரி அப்படியே தங்கிடுவோம் மரத்துக்கு கீழேயே...
என்னப்பா இந்த வருஷம் என்னவோ ஒரு மரத்தையும் வழியில
காணமே ஏம்ப்பா...?"
"அது வந்துக்கா இப்போ பைபாஸ் ரோடு போடுறதுனாலே அரசாங்கமே இந்த மரத்தையெல்லாம் வெட்ட சொல்லிட்டாங்க.. அதான்க்கா.."
"என்னமோ போ தம்பி! அரசாங்கந்தா மரத்தை நட சொல்றாங்க.. அப்புறம் நல்லா தழைச்சி இருக்குற மரத்தை வெட்டவும் சொல்றாங்க..
ஒரு மரக்கண்ண நட்டுவச்சி அது நல்லா தழைச்சி தல தலன்னு நிக்கும்போது அத வெட்டுறதுங்கறது.. போ தம்பி அதுவும் மனுஷ உயிர் மாதிரிதான்.. இத ஏன் புரிஞ்சிக்கமாட்டேன்கிறாங்கன்னு தெரியில இந்த மனுஷங்க"
"சரிங்கக்கா நீங்க பாதயாத்திரை போகும்போது சாப்பாடெல்லாம்
என்ன செய்வீங்க?"
"என்ன தம்பி இப்படி கேட்டிட்டீங்க! எவ்வளவோ நல்ல மனுஷங்கல்லாம் இருக்காங்க... வழியில போகும்போதே உங்கலமாதிரி பசங்க நீர் மோர் குடுப்பாங்க. ஒரு சிலர் எங்களுக்கு தங்கறதுக்கு கல்யாண சத்திரதை ஏற்பாடு செய்து தருவாங்க. சாப்பாடு கூட உண்டு தம்பி.
நாங்க கலைப்பா மரத்துக்கு கீழ ஓய்வெடுக்கும் போது சலசலன்னு அடிக்கிறகாத்துக்கும், அந்தி சாயிர நேரத்துல வந்து அடையிர பறவைங்கலோட தாலாட்டுல கண்ணயர்ந்து தூங்குறதும், காலையில எங்களை தூக்கத்துலேருந்து எழுப்புறதும் பறவைங்கதான்.. இப்போ மரத்தோட சேர்த்து பறவைங்களையும் அழிச்சிக்கிட்டு வர்றாங்க...
என்னமோ போங்க! ஒண்ணுமே புரியல தம்பி"