நிகழ்வைச் சித்தரிக்கும் கவிதைகள்

குறிப்பு : நீங்கள் கவிஞரா ? அப்படியெனில் இதைப்படிக்காதீர்கள் ......அப்புறம் உங்கள் இஷ்டம் !


ஒரு நிகழ்வை
சற்றேறக்குறைய
அப்படியே
சித்தரித்து விடவேண்டுமென்கிற
அயர்ச்சியுடன்
தொடங்குகிறது
என் கவிதை ...............

மேலும்,
அந்நிகழ்வுக்குண்டான
தற்கருத்தும்
புலன்காட்சியும்
குறியீடுகளும்
இன்னபிற
படிமங்களும்
அணிவகுத்து நிற்கும்
பெருமூச்சுடனும் !

எண்ணத் திரவத்தை
அழகான
வார்த்தைக்குடுவைக்குள்
ஊற்றி விடவேண்டுமென்கிற
மன்னிக்கவும் ............
அழகான மற்றும்
புத்திசாலித்தனமான
வார்த்தைக்குடுவைக்குள்
ஊற்றி
விடவேண்டுமென்கிற
பெருந்தவிப்பும்
அக்கவிதைக்கு
இல்லாமலில்லை !

நிகழ்வின்
தன்மையைப் பொறுத்து
இறகு போல
இலகுவாகப் பறப்பதா ?
கற்சிலை போல
இறுக்கிக் கிடப்பதா ?
எரிமலைக் குழம்பு
கக்குவதா ?
இல்லை ......
நான்கு சவுக்கடிகளோடுமட்டும்
நிறுத்திக்கொள்வதா
என்பதான
முடிவுகளை
அக்கவிதை ஏற்கும் !

அரங்கில்
வாசித்தால்
காலக்கொள்ளளவு
ஐந்து நிமிடம்,
நடுநடுவே
நான்கு கைதட்டல்கள்,
என்கிற
மனக்கணக்கும்
ஒருபுறம் ......

" சொன்னதைச் சொல்வது
குற்றம் "
என்கிற
இலக்கண விதியை
ஆங்காங்கே
நினைவுக்கூறவும்
தவறுவதில்லை
கவிதை !

பின்னாளில்
அச்சாக்கம் பெறக்கூடுமென்ற
அக்கவிதைக்குண்டான
முன் ஜாக்கிரதை
பற்றிச் சொல்லவே வேண்டாம் !
நிரம்பவே இருக்கிறது !

இயல்பாக விரிந்து
மேலெழுந்து செல்லும்
தன்மையுடையதாய்த்
தன்னைக் காட்டிக்கொள்ள
சில இடங்களில்
பெரும் பிரயத்தனம்
செய்கிறது
கவிதை !

மேலும் ........
தன்னை
வாசிப்பவர்களை
பிரமிப்பால்
உடையவைக்கும்
யுக்திகளையும்
தன்னுள்
ஆங்காங்கே
அது
இடைச்செருகியே செல்கிறது !

திடீரென்று
ஐயம் கொண்டு
அவ்வப்போது
சொல்ல வந்த
நிகழ்வையும்
கொஞ்சம்
திரும்பிப் பார்த்துக்கொள்வதும்
கவிதையின்
மெனக்கெடல்களில்
ஒன்றுதான் !

இவ்வாறாகவெல்லாம்
நீளும் கவிதை
இறுதியில்
ஓர் ஒப்பனைக்கலைஞன் போல்
தன்னைத்தானே
ஒருமுறை
திருப்தியாய்ப்
பார்த்துக்கொண்டும்...............
முடிய மனமின்றியே
முடிவது போன்ற
அங்கலாய்ப்புடனும்................
திரைப்பட
இறுதிக்காட்சிக்குண்டான
பரபரப்பைத்
தனது இறுதிவரிகளில்
வாசகனுக்குத்
தந்துவிட வேண்டுமென்கிற
நெருக்கடியுடனும்
முடியவே முடிகிறது .........
தன்
கடைசிவரிக்குக் கீழே
ஹைபன் குறியிட்டு
என் பெயர்
பொறிக்கப்பெற்ற
கல்வெட்டுத் தோற்றத்துடன் !

நிகழ்வுதான்
பாவம் !

=======================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (18-Sep-14, 8:53 pm)
பார்வை : 234

மேலே