பூந்தேரில் ஒரு கடைசி பயணம்
இல்லப் பணியை முடித்து
அவசர அவசரமாய்
அலுவலகம் செல்ல
பிரயத்தனங்கள்...
அலை பேசி அழைத்துச் சொன்ன செய்தி
அதிர வைத்தும் அழ வைத்தும்...
என் இமைக்குள்
சிறைவைக்கப் பட்ட கண்ணீர்
விடுதலையான மகிழ்ச்சியில்
இமையை விடுத்து குதித்து
பூமியெங்கும் சிதறலாய்....
இன்றைய கண்ணீருக்கு
பொய் கூறத் தேவையில்லை
விழிகளில் தூசி விழுந்ததாய்...
இன்றும் இன்னும் சில நாட்களுக்கும்
யாரும் காரணங்கள் கேட்கப் போவதில்லை
"உன் கண்களில் கண்ணீர் எதற்கென்று...."
அண்ணனின் மரணச் செய்தியால்
அழுது தீர்த்துவிடலாம்
அத்தனை துக்கங்களுக்கும்....
ஓலத்துடனும் ஒப்பாரியுடனும்
உறவின் பெயர் சொல்லி
"அப்பா" என்று ஒரு அழுகை
"அண்ணா" என்று ஒரு அழுகை
"மாமா" என்று ஒரு அழுகை
"ராசா... மகனே.." என்று
இன்னும் எப்படி எப்படி எல்லாமோ
அங்கங்கே கண்ணீர் உகுத்தபடி.. ....
அண்ணியின் அழுகை மட்டும் தனியாய்...
"அய்யா... என்ன விட்டுப் போக
எப்படி அய்யா மனசு வந்திச்சி??
இப்படி நிற்கதியா தவிக்க விட்டுட்டியே
ஐயோ... நான் என்ன செய்ய???"
இழவு வீட்டு சம்பிரதாயங்கள்
எண்ணெயும் சிகைக்காயும் வைத்து
கடைசி குளியலுக்காய்
அண்ணியின் மடியில்
அண்ணனின் சிரம் கிடத்தி....
"எத்தனை வருடங்களாகிறது அய்யா
நீ இப்படி என் மடியில் கிடந்து
இனி எப்போது இப்படி என் மடியில்
உன் முகத்தைக் காணப் போகிறேன்??"
அண்ணி கதறி அழுததில்
அத்தனை பந்தங்களும் கதறக் கதற
சகிக்க இயலாத சம்பிரதாயங்கள்....
வண்ண வண்ண பூக்கள் ஒப்பனையில்
பூந்தேர் ஒன்று கடைசி பயணதிற்காய்.
ஆன்மாவை இழந்த உடல்
மாலைகள் சூட்டப்பட்டு
அலங்காரத்துடன் தெய்வீகமாய்...
பன்னீர் தெளிக்கப்பட்டு
நறுமணத்தோடு தேரில் கிளம்பிவிட்டது
வெடி சத்தங்களுடன்
இனி வராது.....
.
அண்ணியின் தலையில் கூடை பூக்கள்
முகத்தில் அரை அங்குல மஞ்சள் பூச்சு
என்றைக்குமில்லாத அகலத்தில்
நெற்றி நிறைத்த குங்கும பொட்டு
கண்ணாடி வளையல்கள் அடுக்கடுக்காய்...
மங்கலமாய் அனைத்தும்
இன்னும் சில தினங்களுக்கு....
அனைத்தும் இறக்கப்படும்
இறக்கமற்றவர்களால் சில தினங்களில்...
அண்ணியின் நெஞ்சில் ஏறிய துக்கங்களை
யார் எப்போது இறக்கப் போகிறார்கள்???
விடையறியாது அண்ணியின் விழிகளில்
ஜீவநதி பெருக்கெடுத்தபடியே
என் விழிகளிலும்தான்... ...
(என்னுடைய பெரியம்மாவின் மகன் இன்று இறந்ததின் தாக்கத்தில் இந்த படைப்பு)