மழைத்துளிகளின் பேரணி- வினோதன்
மோதிக்கொண்ட மேகங்கள்
வினை புரிந்து - பிரிந்து
விழும் - நீர்க் குட்டிகளின்
நம்முருண்டை நோக்கிய
சன்னலோர பயணங்களின்
சன நேர வரிகளிவை !
கருவானபோதே நீர்த்த
நிறத்தானவை - முடிக்கி
விடப்பட்டு வேகமெடுக்கும்
வினாடிகளில் நிறமோ
தரமோ மாறுவதில்லை,
நம் மண் வீடேறும்வரை !
வழியில் கண்ட வளிதந்த
குளிர்ச்சியை குடித்துவிட்டு
வயிரோரம் வற்றாது காத்து
இருகரம் காட்டி - வரவேற்கத்
தகுந்த தகுதிகளை தனதாக்கி
நமைத் தாக்கும் துளி நீரே !
உனைச் சுடச்சுட சந்திக்க
விரும்பும் சருமங்கள்
காதலிகளினுடையவை...!
ஆம், நுனிப்புல்லின் அருமை
பனித்துளிக்குத் தானே
பகட்டின்றி புரியும் ?!
தாவர வரவேற்பறை முதல்
தாழ்வார துத்தநாக தகடுவரை...
ஆழ்கடலின் சலனக்காடுகள் முதல்
மொட்டைமாடி குட்டிப்பூக்கள் வரை...
நகரும் வாகனத் தொப்பி முதல்
நகரா நிழற்குடை வரை...
கருஞ்சிகை தாங்கிய பூ முதல்
கொலைகண்ட கருவாடு வரை...
யாவருக்கும் மழையோடு
விளையாடும் ஆசையிருக்கும் !
மழையின் ஆசை ?
அன்றொரு நாளில் - செய்து
முடித்த கப்பலை - மழையாறின்
பாதம் சேர்க்க முடியாமல்
விசும்பிய மழலையின்
விழியோரம் களிப்பு கலக்க...
மீண்டு வந்தது - மீண்டும் வாசலோரம் !
காகித மடிப்புகள் தோறும்
புதைந்து கிடக்கும் பிஞ்சின்
நெஞ்சை - பாசத்தோடு
பருகியபடி பயணிக்கிறது...
மழைத்துளிகளின் பேரணி...
சாக்கடையை நோக்கி !
- வினோதன்