எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் விரல்மாறும் தொடர்கதை - பாகம் 7 - பிரவின் ஷீஜா

உலகிலே இது ஒரு புதுமையான உண்மையான உணர்வுப்பூர்வமான திருமணம் என்று கமலி சொல்லி முடிக்க அதை ஆமோதிப்பதுப்போல் இயற்கை அன்னை ஆசிர்வாதம் செய்தாள் மழைத்தூறல்களில்……

இனி....????.

இயற்கையைக் கடவுளாய் வைத்து திருமணம் இனிதே நடந்தேறியது...... முதல் வேட்டைக்குத் தயாரான கூட்டம் இப்போது திருமணத்தில் அடைபட்டது. இது மகிழ்ச்சியான தருணம், இப்போது வேறு எதையும் யோசிக்க வேண்டாம் என்று எல்லோரும் வீடு நோக்கி சென்றார்கள்.

அங்கே...!!!

ஜீவா-வும் , சரஸ்வதியும் வீட்டிற்குள் நுழைய முயல.., அவர்களை எவர் ஸ்மைல் தடுத்து கமலியிடம் ஆரத்தித் தட்டு எடுத்து வரச் சொல்லி, இருவரையும் வலது கால் உள்ளே வைத்து நடந்து வரச் செய்தனர். அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் இருந்தது. .... இருவரையும் இரண்டு இருக்கைகளில் அமரச் செய்தனர். பால், பழங்கள் கொடுத்து திருமணத் தம்பதிகளை உபசரித்தனர். ஆனந்தி, திவ்யா இருவரையும் கடைக்குச் சென்று மதிய விருந்து தயாரிக்க எவர் ஸ்மைல் அட்டவணை கொடுத்து அனுப்பியும் வைத்தாள்.

அப்படியே எல்லாவரும் சேர்ந்து விருந்து தயாரித்து அரட்டையுடன் சாப்பிட்டு முடித்தனர். பையைத் தரையில் விரித்து அமர்ந்து எல்லாரும் பேசத் தொடங்கினர்... அப்போது சரஸ்வதி தான் ஆனந்தியின் கதையைப் பற்றி கேட்டாள். பதிலாக ஆனந்தியும் அவளது கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

"நான் பிறந்தது வடசென்னை கொருக்குப்பேட்டை. தற்போது தண்டையார் பேட்டையில் வசிக்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன் இருக்கின்றனர். நான் சிறுவயதில் இருந்து பெண்கள் கூடவே சேருவேன், விளையாடுவேன்.அவ்வாறு இருக்கும் போது, அவர்கள் எவ்வாறு தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்களோ அது போலவே நானும் பொட்டு,பூ வைத்துக்கொள்வேன்.

வீட்டில் ஆள் இல்லாத போது நான் என்னைப் பெண்ணாக அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்து மகிழ்வேன். இந்தச் செயலைக் கண்டு என் வீட்டில் உள்ள அனைவரும் என்னை வெறுத்தனர். இவன் பொட்டையாகிவிட்டான். இவன் மோசமானவன், நம்மை அசிங்கப்படுத்துகிறான் எனக் கூறி என்னை அடித்தனர்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்க்குமாறு என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவமானப்படுத்தினர். குறிப்பாக எனது அப்பாவும், அண்ணனும் என்னை மிக மிக அவமானப்படுத்தி தெருவில் போட்டு அடித்தனர், கையை உடைத்தனர், திராவகத்தை(ஆசிட்) எடுத்து முகத்தில் வீச வந்தனர் தாங்க முடியாமல் நான் ஓடி வந்துவிட்டேன்.

நான் அப்போது பெண் போல நீள முடி வளர்த்திருந்தேன். இளைஞனாக இருந்த என்னிடம் அப்பா கூறினார். “ நீ இந்தக் கூந்தலை வெட்டி விட்டு ஆணாக மாறி வீட்டிற்கு வந்தால் உனக்கு எனது சொத்தில் பங்கு, இல்லை என்றால் திருநங்கைகளோடு சேர்ந்து விடு. வீட்டுக்கும் வராதே என்றார். என்னால் அவர்கள் கூறும்படி ஆணாக மாறி வர முடியவில்லை. எனக்குள் இருந்த மிகை மிஞ்சிய பெண் உணர்வு என்னை அவ்வாறு இருக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது.

இந்நிலையில் நான் வீட்டை விட்டு வெளியேறி எவர் ஸ்மைல் அக்காவுடன் சேர்ந்து விட்டேன். பொதுமக்கள் அனைவரும் ‘அம்மா’ என்றே அன்போடு அழைப்பர். ஆனால் பொது இடத்திற்கு நான் செல்லும்போது என்னையும், எங்களைப் போன்றவர்களையும் எவரும் மதிப்பதில்லை. கேவலமாகப் பேசவே செய்கின்றனர்.

இதற்கு முன்பு நான் ஒரு குளிர்பானக் கடையில் வேலை செய்தேன். குளிர்பானம் குடிக்க வந்தவர்களில் பலர் “இந்தப் பொட்டகிட்ட போய் நான் ஜூஸ் வாங்கிக் குடிக்கவா? எங்கெங்க போயிட்டு வந்தாளோ? இவ கையால ஜூசா வேணவே வேணாம்” எனக் கூறிப் பலர் சென்றதைப் பார்த்த கடை முதலாளி என்னை இந்த வேலையில் இருந்து நீக்கி விட்டார்.

நான் நன்கு பூ கட்டுவேன். அதனால் பூக்கடை போட்டு பிழைப்பு நடத்தினேன். பூ வாங்க வந்தவர்கள் “இவ கையில பூ வாங்கவா? ச்சீ” என என்னைக் கண்டு அருவருப்புடன் விலகிச் சென்றனர். எவரும் வாங்கவில்லை.

அர்த்தநாதீஸ்வரனை தெய்வமாக வணங்குகிறார்கள், அந்த வடிவமாக பிறப்பெடுத்த எங்களைக் கண்டால் ஒதுங்குகிறார்கள். இந்த வேலையை துறந்த பிறகுதான் அக்காவிடம் சேர்ந்தேன்...

“ஆனால் ஒன்று, எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு அப்பா, அண்ணன்களே இருக்கக் கூடாது. அவர்களால் தான் எங்களுக்கு தொல்லை என்றார். ஆணாதிக்கம் பெண்களை மட்டுமல்ல பெண்ணாக மாறிய திருநங்கைகளைக் கூட விட்டு வைப்பதில்லை" என்றவளை சிலைபோல பார்த்துக் கொண்டிருந்தனர் புதுமணத் தம்பதிகள்.

............................................
"கடவுள் இரண்டாய்

"கலந்து தோன்றினால்

"கையெடுத்து அதனை

"வணங்கும் நீங்கள்,

"ஆணும் பெண்ணுமாய்

"அரிதாய் தோன்றிய

"எங்களை மட்டுமேன்

"அசிங்கப்படுத்துவது?
..............................................

அடுத்ததாக பார்வை திவ்யாவிடம் செல்ல, திவ்யாவும் ஆரம்பித்தாள் தன சோக மடலை ,

"எனது சொந்த ஊர் சென்னை ஓட்டேரி. கூட பிறந்தது ஒரு அண்ணன். அப்பா கொத்தனார் வேலை செய்கிறார். அம்மா வீட்டில் இருக்கிறார்.
அம்மாவுக்கு பெண் குழந்தை இல்லாத காரணத்தால் வீட்டிற்கு இளையவனான என்னை சிறு வயதில் இருந்தே என் அம்மா எனக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து, கண்மை இட்டு, கொலுசு போட்டு, தலையில் ஜடை போட்டுப் பூ முடித்து அழகு பார்ப்பார்.
இப்படியே பழக்கப்பட்ட நான் பெரியவன் ஆனபோதும் கூட இந்தப் பழக்கத்தால், அம்மா வீட்டில் இல்லாதபோது பெண் போல என்னை நானே அலங்கரித்துக் கொள்வேன்.

இந்த நிலையைக் கண்டு என் அம்மா அடித்தார்கள். இப்படி பல நாள் வாங்கிய அடியால் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. புரசைவாக்கத்தில் ELM பள்ளியில் 10 வது படித்துக் கொண்டிருந்த போது மும்பை மாநிலத்திற்கு நானாக ஓடிவிட்டேன். மும்பையில் எங்கே திருநங்கைகள் இருக்கிறார்கள் என நானே தேடி அலைந்து கண்டுபிடித்து அவர்களோடு என் வாழ்வை தொடங்கினேன்.

அன்றாட உணவு, உடை, மற்ற தேவைகளுக்காக பாலியல் தொழில் செய்தேன். இதற்காக எங்கள் இல்லத்திற்கு வரும் நபர் (டோக்கன்)முன்தொகை 50 ரூபாய் கட்ட வேண்டும். எங்களிடம் 30 ரூபாய் தருவார்கள். இத்தொழிலுக்கு சம்பளமும் எங்களுக்கு இந்த முப்பது ரூபாய் மட்டுமே. இந்த முப்பது ரூபாய் கொண்டு என்னைப் போன்ற அரவாணிகளுடன் இணைந்து மிக மகிழ்ச்சியாக இருந்தேன்.

திடீரென தமிழ் நாட்டிலிருந்து என் அம்மா ஒரு நாள் எனக்கு அலைபேசியில் அழைத்தார். வா உன்னை ஏற்றுக்கொள்கிறேன், உன்னைப் பார்க்கணும்போல இருக்கிறது என அழைத்தார். என்ன திடீர் பாசம்? எனக் கேட்டதற்கு அம்மா கூறினார். ‘காஞ்சனா’ என்ற படம் பார்த்தேன், அதில் திருநங்கைகளுக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் மேடையில் பேசி அழுது நடித்த காட்சியைக் கண்டதும் உன் நினைவு வந்தது. தயவு செய்து வீட்டிற்கு வா என அழைத்தார்.

நானும் ஆசையோடு தமிழ் நாட்டிற்கு வந்தேன். அப்போது எனது அண்ணன் திருமணம் நடந்தது. அம்மா கூறினாள், நீ திருமணத்திற்கு வராதே வீட்டில் இரு, வந்தால் எங்கள் மானம், மரியாதை போய்விடும் என்று கூற என் நெஞ்சே நொறுங்கிப் போனது. நாளடைவில் என்னை வீட்டிலும், சுற்றத்தாரும் ஏளனம் பேசினர்.

வீட்டில் வளர்க்கும் நாயை மதிக்கும் அளவிற்குக் கூட என்னை மதிப்பதில்லை என்னைப் பார்க்க என் தோழிகளான அரவாணிகள் என் வீட்டிற்கு வரும்போது அக்கம், பக்கம் உள்ளவர்கள் அசிங்கமாகப் பேசினர்.

என் அண்ணன் குடித்து விட்டு “அடே பொட்ட உன்னால இந்தக் குடும்ப மானமே போச்சு”, எங்கேயாவது போய் செத்துத் தொல” எனப் பேசும் பேச்சைக் கேட்டு என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறி என்னைப் போன்ற திருநங்கைகள் இருக்கும் பகுதியில் தங்கினேன்.

எனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கடைக்கேட்டல், கடை வசூல் தொழில் செய்து வந்தேன். அதாவது கடை கடையாக ஏறி இறங்கி கை தட்டி இரத்தல் (பிச்சை) கேட்பதே இதன் பொருள்.

இதன் மூலம் ஒரு நாளை 100 கடைகள் ஏறி இறங்கினால் 300 ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தைக் கொண்டே வீட்டு வாடகை, உணவு, மின்சாரக் கட்டணம், உடை, மற்ற பொருட்கள் வாங்கிக் கொண்டோம்.

இதில் பாசஉணர்வுடன் காசு கொடுப்பவர்கள் 10% பேர் மட்டுமே. மீதமுள்ள 90% சதவீதம் பேர் ஆளை விட்டால் போதும் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்கள் என்பது போல 2 ரூபாய் கொடுத்து விடுவார்கள். இதில் பலர் கை, கால் நல்லாத்தானே இருக்கு உழைத்துப் பிழைக்க வேண்டியது தானே என்பார்கள்.
"நான் உழைக்கத்தயார் நீ வேலை கொடுக்கத் தயாரா?" என்றால் கப்சிப் ஆகிவிடுகிறார்கள் அல்லது நகர்ந்து விடுகிறார்கள்.

மும்பையில் நான் இத்தொழிலைச் செய்தபோது 90% பேர் எங்களை மதிப்பு மரியாதையுடன் பார்த்தனர், நடத்தினர். 10% சதவீதம் பேர் மட்டுமே எங்களைக் கண்டு ஒதுங்கினர் அவதூறாகப் பேசினர். ஆனால் தமிழ் நாட்டில் 1௦௦% மக்களும் எங்களைப் பழித்து ஒதுக்குகின்றனர். தகாத வார்த்தைகளால் எங்களைத் திட்டி காயப்படுத்துகின்றனர். சமீபத்தில் ஒரு நாள் தான் எவர் ஸ்மைல் அக்காவை சந்தித்து அவர்களுடனேயே இருக்கிறேன்..... " என்று தன் கதையை கூறி முடித்தாள்.....

...........................................................................
"திருநங்கை என்றதுமே-வெறும்

"தெருநங்கையாய் எண்ணுகின்ற

"எண்ணப்போக்கது

"மாறித்தான் போகுமா?...

"எல்லோரும் போல் நாங்களும்

"வாழத்தான் கூடுமா?

"வேடிக்கைப் பொருளல்ல நாங்கள்

"விந்தையாய் திரும்பிப்பார்க்க;

"வருவானா அர்ஜூனன் மீண்டும்

"எங்கள் வாழ்வுக்கோர் ஒளியுமேற்ற?...
............................................................................

மறுபடியும் பேசி பேசி சலித்து விட்டு தூங்கி போயினர்....... மாலை ஒவ்வொருவராக தூக்கம் கலைந்து எழும்பி முகம், கைகால் அலம்பிவிட்டு இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கினர்.

பின்னர் அனைவரும் கூட்டாக இருந்து இரவுணவை முடித்துக் கொண்டு கமலியை சரஸ்வதிக்குத் துணையாக விட்டு விட்டு இரவு வேட்டைக்குத் தயாரானார்கள். மணியும் பத்து ஆனது.

எவர் ஸ்மைல், ஜீவா, ஆனந்தி, திவ்யா நால்வரும் பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்...... கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் வந்து விட்டிருந்தார்கள். ஊருக்கு ஒதுக்குபுறமான கோயில் மண்டபத்தில் அமர்ந்தார்கள். இப்போது மணி 11:30 ஆனது......

திடீரென ஏதோ சத்தம் மண்டபதிற்குள்ளிருந்து வரவே ஜீவா அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்..... மெதுவாக எழுந்து மண்டபத்தின் ஒரு ஓரமாய் இருந்த கல்லினால் செய்த ஜன்னலின் வழியாக தன் கூர் கண்களால் உற்றுப் பார்த்தான்....

அங்கே ஒரு பெண் கை, கால் கட்டப்பட்டு கீழே படுக்க வைக்கப்பட்டிருந்தாள். நன்றாக பார்க்க அவள் மட்டும் தான் உள்ளே இருப்பதாகத் தோன்றியது....... அவள் தான் அங்கே முனங்கிக்கொண்டு படுத்திருந்தாள். வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டர்-ஐ மீறி வந்து கொண்டிருந்தது அந்த வலியான முனகல்.

ஜீவா உடனே சுதாகரித்துக் கொண்டு மூவரையும் அழைத்து நிலைமையை எடுத்துச் சொல்லி மீதமிருந்த மூன்று ஜன்னல்கள் இருந்த மூலைக்கு மெதுவாக போய் வேறு ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான். ஜீவா மறுபடியும் உள்ளே நோட்டம் விட ஆரம்பித்தான்.

ஆனந்தி , எவர் ஸ்மைல் போன ஜன்னல்கள் அருகே ஆட்கள் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை, புதர்கள் மண்டியே கிடந்தது தரையில்.... திவ்யா மெதுவாக நடந்து மண்டபத்தின் தூணின் மறைவில் நின்று நோட்டம் விட ஆரம்பித்தாள். அப்போது சிகரட் புகைக்கும் மணம் காற்றில் வந்துகொண்டிருந்தது.....

மண்டபத்தின் பின்வாயில் பக்கமிருந்த கதவின் அருகே இருக்கையில் அமர்ந்திருந்த தாடிக்காரன் தான் புகைத்துக் கொண்டிருந்தான். 'என்ன செய்யலாம்' என்று யோசித்துக் கொண்டே , சரி மற்றவர்களிடம் கூறலாம் என்று நினைத்துக் கொண்டு மெதுவாக இடம் மாறினாள்.

நேராக வந்தவள் மெதுவாக அங்கே நடந்ததைக் கூறினாள். இனிதான் பொறுமையாக நடக்க வேண்டும் என ஜீவாவும் கூற அனைவரும் தலையசைத்தார்கள். எவர் ஸ்மைல் என்ன செய்யலாம் என யோசிக்கும் முன்பே ஜீவா தயாராகியிருந்தான்.

"திவ்யா உனக்கு தான் வேலை" என்று கூறிவிட்டு என்ன செய்ய வேண்டும் எனக் கூறி முடித்தான்.

திவ்யா மெதுவாக நடந்து சென்று கையில் இருந்த கயிறால் அங்கே புகைத்துக் கொண்டிருந்தவனின் கழுத்தில் சுருக்குக் கயிறு போட, ஒரு முனையை எடுத்து புதர்களுக்கு இடையில் எறிய, பதுங்கியபடியே வந்த அம்மூவரும் கையிற்றை பிடித்து இழுக்க , கழுத்து இறுகியதும் அவன் கத்த முற்பட , திவ்யா தான் கைகளில் எடுத்து வந்திருந்த துணியால் அவன் வாயை அடைத்து விட்டாள். பின்னர் அவனை இழுப்பதற்கும் உதவி செய்தாள். நால்வருமாக அவனை புதரில் இழுத்துச் சென்று ஒதுக்கி கிடத்தினர்..... திமிரியவனை இறுக்கிப் பிடித்தனர். கத்தியால் கழுத்தை சர, சரவென அறுத்து தன்னலத்திற்காக அல்லாமல் பிற நலத்திற்காக முதல்க் கொலையை செய்து முடித்தான் ஜீவா.

பின்னர் நால்வரும் சற்றும் தாமதிக்காமல் எழுந்து ஓடி மண்டபத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே போய் கட்டிப் போட்டிருந்த பெண்ணை அவிழ்த்துக் கொண்டு வெளியே வரவும், தூரமாக அந்த தாடிக்காரனின் கூட்டாளிகள் வரவும் சரியாக இருந்தது.

அப்போது.....!!!!

எழுதியவர் : பிரவின் ஷீஜா (29-Sep-14, 10:37 pm)
பார்வை : 247

மேலே