அது எவ்வளவு அழகாக இருந்தது,,,,
ஒரு தேநீர் கோப்பையை போல
கொஞ்சம் கசப்பாயும்
கொஞ்சம் இனிப்பாயும்
அது எவ்வளவு அழகாக இருந்தது
புத்தகம் என்றோ
வண்ணத்து பூச்சி என்றோ
கொடுகிய புறாக் குஞ்சாகவோ
அதை நீங்கள் நினைத்திருக்கலாம்
அது எதுவாகவும் இருக்கவில்லை அது அதுவாக இருந்தது
அவமானத்தின் போது
வாய் பொத்தி அழவும்
காதல் தோல்வியை மறப்பதற்கும்
கூதல் கண்ணாடியின் முன்பு
முகம் பார்த்து பேசிக்கொள்ளவும்
தேவையாக இருந்தது
பொம்மைகளோடு விளையாடிய காலம் முதல்
அது என்னுடன்தான் இருந்தது
இப்போது இருக்கக் கூடும்
கடலின் அந்தப் பக்கம்
தேம்ஸ் கரையின் அமைதியில்
பழத்தோட்ட மர நிழல் ஒன்றில்
வான் வெளியில் தாழப் பறக்கும்
பறவைகளின் வெளிகளிலும்..
யன்னல் திறக்கிறேன்
சிறு தோட்டம்
இலைகளை தூக்கி அலைகிறது காற்று
வலசை பறவைகள் சில
மாலை செவ்வானில் பறந்து திரிகின்றன
விருந்தாளிகளின் வருகைக்காய்
எப்போதோ போடப்பட்ட நாற்காலிகளிலும்
வெள்ளை மேசைகளிலும்
கருகி கிடக்கிறது
சில மஞ்சள் பூக்கள்...