எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் – விரல் மாறும் தொடர்கதை பாகம் – 8 சியாமளா ராஜசேகர்

பின்னர் நால்வரும் சற்றும் தாமதிக்காமல் எழுந்து ஓடி மண்டபத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே போய் கட்டிப் போட்டிருந்த பெண்ணை அவிழ்த்துக் கொண்டு வெளியே வரவும், தூரமாக அந்த தாடிக்காரனின் கூட்டாளிகள் வரவும் சரியாக இருந்தது.

அப்போது.....!!!! ....................

“ஆ “ என்ற அலறல் சத்தம் . ஜீவாவும் ,மற்றவர்களும் சத்தம் வந்த இடத்தைக் கூர்ந்து கவனித்தனர் .மங்கிய நிலவொளியில் தாடிக்காரனின் பிணம் தடுக்கி அவன் கூட்டாளி குப்புற விழுந்து மண்டையில் அடிபட்டுக் கிடப்பது தெரிந்தது . “டேய் மாரி ! என்னடா ஆச்சு ? “ மற்றவன் குனிந்து பார்க்கும் வேளையில் .....நால்வரும் அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு மெல்ல நழுவினர் . அரைமணிநேரம் யாரும் ஏதும் பேசவில்லை .இருளில் அழைத்து வந்த பெண்ணைக்கூட யாரும் கவனிக்கவில்லை .

தெரு விளக்கு வெளிச்சத்தில் அப்பெண்ணைப் பார்த்த நால்வருக்கும்
திகைப்பு ! ஏனென்றால் அவள் பெண்ணுருவில் இருந்த திருநங்கை .

“ யாரும்மா நீ ? உன்ன ஏன் இருட்டுல கையகால கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க ...? ஜீவா கேட்டான் .

அந்தப் பெண் ஐவரையும் மாறி மாறி பார்த்தாள் . அவள் முகத்திலிருந்த பீதி மறைந்து சாந்தமானது .திவ்யா பைக்குள் இருந்த தண்ணீர் பாட்டிலை நீட்ட .... அதை வாங்கி ஒரு வாய் குடித்தவள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி முகம் கழுவினாள் .

“சரி...வாங்க ... வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் .வேகமா நடப்போம் . நாம போய் சேரவே மணி ரெண்டாயிடும் .” எவர்ஸ்மைல் சொல்ல .... அமைதியாய் நடந்து வீடு வந்து சேர்ந்தார்கள் .

கதவைத் தட்டியதும் கமலி வந்து கதவைத் திறந்தாள் .அதற்குள் சரஸ்வதியும் எழுந்து வந்தாள். கூட ஒரு பெண்ணைப் பார்த்ததும் இவர்களுக்கும் திகைப்பு .

சரஸ்வதியைக் கண்ட ஜீவா ,” இன்னைக்கு முதல் வேட்டையாடியாச்சு “ என்று சொல்ல ....இந்தப்பெண் யார் என்பதுபோல் பார்வையால் கேட்டாள்.

“முதல்ல பிஸ்கட்டும் ,சுக்குக்காப்பியும் குடுங்க.... களைப்பா இருக்கு !”
கமலி சுட சுட சுக்கு காபி போட்டுக்கொடுத்தாள் .

சற்று ஆசுவாசப் படுத்தியபின் எவர்ஸ்மைல் , “நீ யாரும்மா ....உன்ன கட்டிப் போட்டது யாரு ?” என்று கேட்டாள் .

சுவற்றில் சாய்து உட்கார்ந்திருந்தவள் கண்ணீர் வடிய பேசத் தொடங்கினாள்.

“என் பேரு சூர்யா ! நான் அநாதை ....எங்க கிராமத்துல இருந்த வேதக்கோயில்லதான் வளந்தேன் .வயசு ஆக ஆக எனக்குள்ள நெறைய மாற்றம்.எனக்கு பொம்பளப் புள்ளைக மாதிரி இருக்கத்தான் புடிச்சிது .ஆம்பளப் பிள்ளைக கிட்ட இருந்து வெலகுனேன் . என்ன சிலபயலுவ புரிஞ்சிக்கிட்டாங்க.
நாளாக நாளாக நான் தங்கி இருந்த ஆஸ்டல்லயும் சிலரு என் கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணாங்க .எனக்கு புடிக்கல . பதினெட்டு வயசு வரைக்கும் சமாளிச்சி இருந்துட்டேன் . எங்க கிராமத்து வெடலப் புள்ளக ரவுசு தாங்க முடியல ...!”

“என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தப்போ பம்பாய்க்குப் போனா ஆபரேஷன் பண்ணி முழுபொண்ணா மாத்திடுவாங்கன்னு ஒருத்தர் சொன்னத நம்பி அவரு கூட போனேன் .அவரு என்கிட்ட தகாத முறையில நடந்துகிட்டாரு. படாத பாடு படுத்திட்டாரு . என் நச்சரிப்பு தாங்க முடியாம பம்பாய்ல ஒரு அரவாணிகிட்ட கூட்டிட்டு போனாரு .அந்த அம்மாதான் என்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் ஆபரேஷன் பண்ணிவிட்டாங்க . ஒரு வாரம் அங்க தங்கி இருந்தோம் . அங்கேருந்து நேரா கோயம்பத்தூர் கூட்டிட்டு வந்து ரூபா வாங்கிட்டு ஒரு சண்டாளன் கிட்ட வித்துட்டாரு . அவனும் கூட்டாளி இரண்டு பேரும் சேர்ந்து என்னை நாசம் பண்ணிட்டாங்க . ஆபரேஷன் பண்ண ரணம் கூட இன்னும் ஆறல . தப்பியோட முயற்சி பண்ணேன் .அதான் இந்த இருட்டு மண்டபத்துல கையகால கட்டி போட்டுட்டானுங்க . கடவுள் புண்ணியத்துல நீங்க வந்து காப்பாத்துனீங்க ...இனிமே என்ன பண்றது எங்க போறதுன்னு தெரியல ....எனக்கு ஆம்பிளைகளக் கண்டாலே வெறுப்பா இருக்கு குத்தி கொல்லனும் போல தோணுது ..... “ குமுறி குமுறி அழுதாள் சூர்யா .

“ அழாதேம்மா ....அம்மா நான் இருக்கேன்...! “.என்ற எவர்ஸ்மைல் இது கமலி ,இது ஆனந்தி ,இது திவ்யா , இது ஜீவா , இது சரஸ்வதி.... ஜீவாவோட மனைவி “ என்று எல்லோரையும் அறிமுகப் படுத்த ....... சூர்யா , ஜீவாவையும் ,சரஸ்வதியையும் மருட்சியோடு மாறி மாறி பார்த்தாள் .

“ நானும் உன்னப் போலதான் ! ஜீவிதா என் பேரு .சரஸ்வதி வயத்துல வளர்ர குழந்தைக்காக ஜீவான்னு உருமாறியிருக்கேன் . காலைலதான் கல்யாணம் நடந்தது “ என்ற ஜீவாவை ஆச்சரியத்தோடு பார்த்தாள் சூர்யா .

“தெரிஞ்சோ ,தெரியாமலோ நம்ம கூட்டத்துல வந்து சேர்ந்துட்ட ....இனி கவலய விடு..... இப்ப உன்னோட சேர்த்து ஏழு பேர் இருக்கோம் . இனிமே நாதாரித்தனமா நடக்கறவங்கள நரவேட்டையாடறதுதான் நம்ம குறிக்கோள் .நம்ம கேங்குக்கு ‘ரெயின்போ”ன்னு பேர் வச்சுப்போம் .சரி ...சரி... எல்லோரும் போயி தூங்குங்க ...காலையில உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன் !” என்றாள் எவர்ஸ்மைல் .

காலையில் எல்லோரும் சுற்றி அமர்ந்து காபி குடிக்க எவர்ஸ்மைல் பேச ஆரம்பித்தாள் . “ஜீவா ! ....சரசு மாசமா இருக்கா ....இந்த நேரத்துல அவள சந்தோஷமா வச்சுக்க வேண்டியது நம்ம கடமை ... வீட்டுக்குள்ளயே போட்டு அவள அடச்சு வைக்காம வெளியில கூட்டிட்டுப் போகணும் !”

“ எங்க போறது ....எங்க போனாலும் நாம அசிங்கம்தான் படவேண்டியிருக்கு ...நம்மளோட சரசுவையும் கூட்டிட்டுப் போனா .... பாவம்மா அவ ....!!”

“ நீ அதப்பத்தி கவலைப்படாதே ..... நான் நமக்கேத்த இடமா சொல்லுறேன் .சித்ரா பௌர்ணமி அன்னிக்கு விழுப்புரம் , கூவாகத்துல கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடக்கும் .15 நாள் விசேஷம் .அன்னைக்குதான் எல்லா ஊர்ல இருக்குற அரவாணிங்க எல்லாம் ஒண்ணுகூடுவாங்க ! ஆட்டம் ,பாட்டம் ,கேளிக்கைன்னு ரொம்ப அமக்களமா இருக்கும். நாம எல்லோரும் சேர்ந்து அங்க போயிட்டு வருவோம் . மனசுக்கு மகிழ்ச்சியாவும் இருக்கும் . அமைதியும் கெடைக்கும் .”

இதைக் கேட்ட சரஸ்வதிக்கு ஆச்சர்யம் .” இது என்னம்மா புது விஷயமா இருக்கே .... நான் கேள்விப்பட்டதே இல்லையேம்மா .... !”
“கதை சொல்றேன் கேளு ....! மகா பாரதத்துல அர்ஜுனனுக்கும் , ஒரு வேடுவப் பொண்ணுக்கும் பொறந்த பிள்ளைதான் அரவான் . பாரதப் போர்ல
பாண்டவர் ஜெயிக்கணும்னா எந்த குற்றமும் இல்லாத , லட்சணமான மனிதபலி
கொடுக்கணும்னு சொன்னதுனால ஸாமுத்ரிகா லட்சணம் பொருந்திய அரவானை பலிகொடுக்க கேட்டாங்களாம்.அரவான் அதுக்கு சம்மதிச்சாலும் ஒரு கண்டிஷன் போடறான் .கடைசி ஆசையா ஒரு பொண்ணு கூட இல்லறவாழ்வு அனுபவிச்சதுக்கப்புறந்தான் பலிக்களம் போவேன்னு சொன்னானாம். யாரு கட்டிப்பாங்க ? கடைசியில கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானக் கட்டிக்கிட்டாராம் . மறுநாள் அரவான் பலியானானாம் .!”

அந்த மாதிரி மோகினியா அரவாணிங்க தங்கள பாவிச்சி கூத்தாண்டவராகிய அரவானை கணவரா நெனைச்சி கோயில் அர்ச்சகர் கையால தாலி கட்டிப்பாங்க .நைட் முழுக்க பொங்கல் வச்சி கும்மி அடிச்சி ஒரே ஆட்டம் பாட்டம்தான் . காலையில அரவான் சிற்பத்த தேருல எடுத்துட்டு பலிக்கு கொண்டு போவாங்க அது முடிஞ்சதும் திருநங்கைகள்ளாம் தாலி அறுத்து , பூ எடுத்து ,.வளையல் உடச்சி வெள்ளைப்புடவை கட்டிப்பாங்க ....ஓன்னு அழுது தீர்ப்பாங்க .....!
நாம இந்த தடவை அதுல பங்கு பெறலன்னாலும் சும்மா போயி பாத்துட்டு வரலாம் ....!”
எல்லோருக்கும் செம குஷி .

அடுத்த ரெண்டு நாளில் ரெயின்போ குழு கூவாகத்துக்கு தங்கள் பயணத்தை
எவர்ஸ்மைலுக்குச் சொந்தமான bolero காரில் துவங்கியது .ஜீவா கார் ஓட்ட கிண்டலும் கேலியுமாய் ஜாலியாய் வந்து சேர்ந்தனர் . இவர்களின் கள்ளமில்லாச் சிரிப்பில் , பேச்சில் சரஸ்வதி சத்யாவையும் மறந்து இவர்களுடன் மனம் ஒன்றினாள்.

கூவாகம் முழுக்க திருவிழாக்கோலம் . எங்கெங்கு காணினும் திருநங்கைகள் .வண்ண வண்ண உடைகளில் வசீகரமாய் ....எங்கு பார்த்தாலும் உற்சாகம் ....சந்தோஷ ரேகைகள் ....சரஸ்வதிக்கு தன் தோழமைகள் அவர்கள் பாலினத்தாரோடு கூடி களித்து மகிழ்ந்ததில் நெஞ்சம் நெகிழ்ந்தாள் . ஆட்டம் பாட்டம் போட்டிகளில் பங்கு பெற்றாலும் மற்ற சடங்கு , சம்பிரதாயங்களில் ரெயின்போ குழு கலந்துகொள்ளவில்லை .....புது மணப்பெண்ணாய் வயிற்றில் பிள்ளையோடு இருக்கும் சரஸ்வதிக்காக .....!!

அன்றைய பொழுது ஆனந்தமாய்க் கழிந்தாலும் அங்கு அவ்வப்போது கண்ட காட்சிகள் ரெயின்போ குழுவின் மனதைக் கிள்ளியது . திருநங்கைகளைக் காண , அவர்களுடன் கூடி களிக்க வந்த விடலைகளின் சீண்டலும் ,நக்கலும் ,ஏளனப்பேச்சும் அருவருக்கத்தக்க நடவடிக்கையும் எல்லோர்மனதிலும் ஆழமாய் பதிந்தது . அன்றைய இரவு கேளிக்கை எல்லாம் முடிந்து மறுநாள் காலை விதவைக் கோலம் பூண்டு வெள்ளை புடவையில் ஒப்பாரி வைப்பதை பார்த்த சரசுக்கு மனதைப் பிசைந்தது . திருநங்கைகளின் வாழ்க்கையை எண்ணி மனம் வருந்தினாள்.

அப்போது வெள்ளைப்புடவை அணிந்து அழுத கோலத்திலிருந்த ஒரு திருநங்கையிடம் வேடிக்கைப் பார்க்க வந்த இரண்டு பேர் மிகவும் இழிவாக நடந்து கொண்டனர் . அப்பெண் மனம் நொந்து எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை .இடையைக் கிள்ளவும் , சேலையை இழுப்பதுமாய் இருந்தனர் .

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரெயின்போ குழுவுக்கு ரத்தம் சூடேறியது. பார்வையாலேயே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் . அடுத்த வேட்டைக்கு வேளை வந்து விட்டதோ .....??

பொறுத்திருந்து பார்ப்போம் ..... தொடர்வது யார் ......??
பொறுங்கள் .....பொறுங்கள் ..... ஒரு சிறிய இடைவேளை !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Oct-14, 4:38 pm)
பார்வை : 266

மேலே