பொருளற்றவை

இப்போதைக்கு
என்னால்
இவ்வளவுதான் சொல்லமுடியும் .
ஆற்றின்
அக்கரையில்
சிற்ப வெளிச்சங்களில்
சிம்மங்கள்
இரை தேடிய போது
மான்களுக்குப் பதில்
மனிதங்கள் குதறப் பட்டன.
செவிட்டுப் பிள்ளையின்
மணக்கோலம்
அவனைப் பொருத்தமட்டில்
அமைதியாகத்தான் நடந்து முடிந்தது.
மாலையில்
மேளக்காரர்களும்
நடனக் கார்களும்
கூலி வாங்கிச் சென்றார்கள்.
வெயில்
ஒரு பொழுது சுருங்கியும்
ஒருபொழுது விரிந்தும்
சுள்ளென்று அடித்தது.
கொல்லைப் புற
வைக்கோற் போர்கள்
கூட்டமாய்
தீக்குச்சிகள் செய்து களைத்தன.
படைத்தவனுக்கே
பொருள் தெரியாத போது
பரந்தாமன்
அந்த பாட்டோடு
யுத்தம் செய்து
பாதி ஆயுசில் போனான் .
இவன்தான்
அன்றொருநாள்
முழுநிலவை பாடும்போது
-கிராமத்து
தெரு விளக்குகளின்
ஒய்வு தினம்-
என்று சொன்னவன்...

எழுதியவர் : சுசீந்திரன். (1-Oct-14, 8:35 pm)
பார்வை : 71

மேலே