அகதிகள் நாங்கள்
தமிழன் அகிம்சை வழியன்றி யாதும்
அறியாதவன் உலகத்தின் மூலைகளில்
அகதியாய் ஒதுங்கி தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
நாடிருந்தும் நகரமிருந்தும் நிலமின்றி
அகதிகளானோம் நாங்கள்!.
ஈழமென்ற கனவின் கனவுகளை
சுமக்கும் தடம் அறியாத படகுகள் நாங்கள்!
ஊமைகளாய் திருப்பி எழுத முடியாத
தீப்பிடித்த தூரிகைகள் நாங்கள்!
எண்ணற்ற இன்னல்கள் நெஞ்சில் கொண்டு
உயிர்களை காக்க ஓடிய கூட்டம் நாங்கள்!
சொந்த மண்ணின் மூச்சுக்காற்று தந்த
சுகம் கூட இந்த ஏசி காற்று தருவதில்லை!
தண்ணீரில் கண்ணீர் விடும் மீன்கள் நாங்கள்!
தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார்..?