எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் விரல்மாறும் தொடர்கதை - பாகம் 10 - ராம்வசந்த்
அப்போது நான்கு போலீஸ்காரர்கள் எவர்ஸ்மைலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்....
.....ஜீவா எங்கே? எங்கே? எங்கே?
......போலீஸ்காரர்கள் எதற்கு வருகிறார்கள்?? ...................
" ஏய் எவர்ஸ்மைல் நில்லுடி ? " என்று கொஞ்சம் நல்ல பளபள காக்கி அணிந்த இன்ஸ்பெக்டர் அதட்டினார் ..மற்ற மூவரும் ஓட்டுனர் , கான்ஸ்டெபிள் , ரைட்டர்.!
எவர்ஸ்மைலுக்கு இவரை தெரியும் .கோவையில் புறநகர் காவல் நிலையம் ஒன்றில் கண்காணிப்பாளர் .
அவ்வப்போது ஊரில் நடை பெரும் கொலை, கொள்ளைகள் போது இவளை அழைத்து தொந்தரவு செய்வார்கள் போலீஸார் .
" ஏய் நீங்க தானடி ராத்திரியும் , பகலுமா எல்லா சிக்னல்லயும் நிக்கரவளுக .. உங்களுக்கு தெரியாம எதுவும் நடக்காதுடி " என்று கேவலமாக கேட்பார்கள் . அந்த .....களுக்கு "எனக்கும் ஒன்னும் தெரியாது' என்று சொன்னால் பொய் .
கொஞ்ச பணத்தை கையில் திணித்தால் அது உண்மை ஆகிவிடும்.!
அதட்டல் தொடர்ந்தது...கையில் குச்சியை உருட்டியபடி " உனக்கு ஜீவா ன்னு ஒருத்தர தெரியுமா ? " ..
எவர்ஸ்மைல் தன் போராட்டங்களில் இவன் பாட்டனையே பார்த்தவள் .
' யாரு சார் . தோழர் ப . ஜீவானந்தமா ? அவர் புக்ஸ் நிறய படிச்சிருக்கேனே ..ஆனா அவரு இறந்துட்டார் சார் . நல்ல மனுஷன் .! "
" என்ன நக்கலா ? இந்த ..டியா தனம்லாம் வேற எங்கியாவது வச்சுக்க " ( 'உன் கிட்ட தானடா வச்சுக்க முடியும்.' ) என்று அவளை தள்ளியபடியே கமலி , திவ்யா , ஆனந்தி எல்லோரையும் முகம் பிடித்து நீதான் ஜீவாவா ? என்று கேட்கிறார் ... இவனுக்கெல்லாம் எதுக்கு 'ர்'... 'து' ன்னுதான் போடனும். . ஆனால் பாலியல் மாறுபாட்டுக்காக "ன் " என்று சொல் என எவர்ஸ்மைல் அக்கா சொல்கிறாள் .
ஒன்று புரிந்தது . ஜீவாவை மோப்பம் பிடித்து விட்டார்கள் .எவர்ஸ்மைல் அக்கா இது நேரும் என்று எதிர்பார்த்தாள் . சொல்லப்போனால் இது லேட் .
சத்யாவை அவன் வீட்டில் தேடி இருப்பார்கள் , ஜீவாவும் வீட்டை விட்டு வந்து விடடாள் . ஐந்து கொலைகள். சத்யா மரணம் ...
கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் கொலைகளை ஆதாரமில்லாமல் மறைத்தாலும் .., ஊரின் ஒதுக்குப்புற கோயில் மண்டப கொலை?? .தாடிக்காரன் கூட்டாளிகள் கண்டிப்பாய் காவல் துறையை அணுகி இருப்பார்கள் ...
இதெல்லாம் அக்காவும் , ஜீவாவும் ஏற்கனவே பேசியதுதான் . இந்த சூழ்நிலைக்கு அவர்கள் தயாராகவும் இருந்தார்கள் மற்றவர்களை அனாவசியமாக அச்சுறுத்தாமல் ...
"நீங்க எல்லாம் வண்டியில ஏறுங்க " என்றான் காங்கேயன் . அவன் சட்டையில் குத்தி இருந்தது அப்பெயர் .
"வேற யாரு உங்களோட இருக்கிறது? "
தன்னோடு கமலி , திவ்யா , ஆனந்தி ஏற அவ்வளவுதான் சார் என்றாள் அக்கா .
நல்லவேளை சரஸ் , சூர்யா அங்கு இல்லை .ஜீவா பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையோடு இருக்கையில் சாய்ந்தாள்.
எவனோ ஓசியில் அனுப்பிய இன்னோவா ஸ்டார்ட் ஆனது ....
நடுவழியில் ...அக்கா சைகையால் சொல்ல பன்றி வேட்டைகளுக்காக வைத்திருந்த சிம்கார்டை தங்கைகள் போனில் இருந்து உருவி தூக்கி எறிந்து விட்டனர் ..காங்கேயன் இயற்கை அவசரத்திற்காக
ஸ்டாப் சொன்னபோது .....பிறகு வண்டி கோவை நோக்கி பறந்தது .
....................................................
ஜீவா ... ஜீவிதா என்றழைப்பதே அவளுக்கு பிடித்திருக்கிறது . ஜீவிதாவுக்கு கொஞ்ச நாளாவே சந்தேகம் ..தன்னை போலிஸ் சுற்றுகிறார்கள் என்று ..அவளுக்கு தன் மேல் பழி ஏற்று சரண் அடைந்து மற்ற அனைவரையும் அவர்கள் பணியை / வாழ்க்கையை வாழ செய்ய வேண்டும் என்று நினைத்த படி ...யே அவள் பயணம் போய்க்கொண்டிருந்தது ....ஒருநாள் மொட்டை மாடியில் " mom i need to be a girl " என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு திருநங்கையின் தாய் , ஜஸ்ட் எவெலின் ( just evelyn )எழுதியது .
அதில் ...டேனியல் என்ற தன் மகனின் நடவடிக்கைகள் பெண் போலவே இருக்கிறது . அவனுக்குள் இருக்கும் பெண்ணை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள் எவெலின் ..பிறகு மருத்துவர்களிடம் பேசுகிறாள் . நிறைய புத்தகங்கள் படிக்கிறாள் .திருநங்கை பிறப்பு , மாற்றம் இதை அறிகிறாள் . இது மிக இயற்கையான விஷயம் என்பதையும் அறிகிறாள் . டேனியலை அவன் தந்தை , சகோதரர்கள் , சமூகம் புறக்கணிக்கும்போது அந்த தாய் போராடுகிறாள் .வெறும் அன்பு யாருக்கு வேண்டும் . புரிதல் முக்கியம் என்கிறாள் .
நம்மில் யாரேனும் அடுத்த ஜென்மத்தில் திருநங்கை ஆக பிறக்கலாம் . நமக்கே பிறக்கலாம்.நம் பிள்ளைகளுக்கு பிறக்கலாம் .
இது இயற்கை . பயப்பட தேவையே இல்லை என்று தெளிகிறாள் . தெளிவிக்கிறாள் .டேனியல் ஆசைப்படி அவளை டேனிலி ஆக்கி , டேனிலியை படிக்க வைத்து சிறந்த பிரஜை ஆக்குகிறாள் .டேனிலி ஊர் மெச்ச சந்தோஷமாக வாழ்கிறாள் ....
தாய் தன் கருவில் உதித்ததை பாதியில் விரட்டிய குற்றம் இல்லமால் மகளை அணைக்கிறாள் .
ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய நூல் என்று இதை அவள் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லியதுண்டு .
'ம்..ஹும் ' என்ற கனைப்பு சத்தம் கேட்டு திரும்பினாள் ஜீவிதா .அக்கா சிகரட் பிடித்துக் கொண்டிருந்தாள்.
" அக்கா , நான் எவ்வளவு முறை சொல்லிட்டேன் . நாம உருவத்திலும் , உடையிலும் மட்டும் அல்ல ..பழக்கத்திலும் பெண்ணா மாறனும்னா இந்த ஆண் பெருமைப்படும் பழக்கங்களை விட வேண்டும் .புகைப்பது , கஞ்சா , மது எல்லாம் நம்மை சீரழிக்கும் . நம்மை இன்னும் அன்னியபடுத்தும். "
' சரிடி " என்று சிகரட்டை ஈவர் ஸ்மைல் அணைத்து தூக்கிப்போட்டாள் .
" நமக்கு தங்க இடம் கூட கொடுக்காத இந்த உலகத்துல , இந்த ஹவுஸ் ஓனர் மாதிரி , காருண்யா ஹாஸ்பிடல் , எங்க ஆபீஸ் பியூன் மாதிரி பல நல்ல உள்ளங்கள் இருக்கு அக்கா . அதை நம் தவறான செய்கைகளால் நாம் இழந்துடக்கூடாது "
புத்தகத்தை மூடி வைத்தாள் ஜீவிதா. மேலே பார்த்தாள் அக்கா .பறவைகள் பறந்து கொண்டிருந்தது , இரண்டு கூட்டமாய் ....
அக்கா ஏதோ சீரியஸ் ஆன விஷயம் சொல்லுபோதேல்லாம் மேலேதான் பார்ப்பாள்.
" ஜீவி நான் சொல்றத கேட்டுக்கோ . நாம் இரண்டு அணியா பிரிய வேண்டிய நேரம் இது . நான் , ஆனந்தி , திவ்யா , கமலி எல்லாம் ஒரு கேங்கு .நீ , சரஸ் , சூர்யா எல்லாம் ஒரு அணி . "
" எதுக்குக்கா ?"
" இத பார் . பெண்கள் , திருநங்கைகளை பாலியல் கொடுமை படுத்துறவங்கள நாம தண்டிக்கணும். .அதனால மத்தவங்களுக்கு பயம் வரும் . ராத்திரில பெண்கள , திருநங்கைகள அந்த முயற்சி காப்பாத்தவும் செய்யும் . அதே சமயம் இந்த டிவி சேனல் வேலைகளை நாம் கவனிக்கணும் .அது நமக்கு கிடைத்த மிக பெரிய வரபிரசாதம் .அதை வச்சு நமக்கு பெரிய சமூக அங்கிகாரம் கெடைக்க வழி நிறைய இருக்கு "
சரிக்கா .. நீயி நானு என்று ஆரம்பித்த ஜீவிதாவை அக்கா தடுத்தாள்.
"இத பாரு ... நீயும் நானும் ஒரே அணியில இருக்க கூடாது . நாம ரெண்டு பேருதான் இந்த அணிகளுக்கு தலைவர்கள் . நான் அநீதி எதிர்த்து ... நீ நீதி படைத்து ...
அதுல்லாம சரஸ் வேற முழுகாம இருக்கா.......... "
" அக்கா நான்தானே எல்லா கொலைகளையும் பண்ணியது "
" ச்சி .. வாய கழுவுடி . அது களைகள் ...புடிங்கியாச்சு . போட்டாச்சு .. அவளோதான் " என்று தொடர்ந்தாள்.
"இத பாரு நாங்க எல்லாத்தையும் பாத்தவங்க .எங்கள ஒரு கொம்பனும் ஒன்னும் பண்ண முடியாது .சோ யு த்ரீ டூ குட் . வி போர் டூ வெரி குட் (so you three do good , we four do very good ) ' என்று சிரித்தாள் .
ஜீவிதா அக்காவின் ஆங்கிலத்துக்காக மட்டும் சிரித்தாள்.
அக்கா போடும் ஓவர் மேக்கப் அதை விட அவளை சிரிக்கச் செய்யும் ."ஏய் ரொம்ப சிரிக்காதடி என் இள வயசுல நான் ராதா மாதிரி இருப்பேன்டி ... என்ன ... இப்ப நானு கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன் " என்பாள் ." அக்கா .. கொஞ்சம் இல்ல ... ரொம்ப "....
'"அடிபோடி .. ராதவும்தான் வெயிட் போட்டுடுச்சு " என்று அவளும் சிரிப்பாள்.
அக்கா ஒரு புதிர் . அவள் ஒருத்தரை காதலித்தாளாம் . மூன்று வருடம் அவனோடு வாழ்ந்து தனக்கு குழந்தை பிறக்காது என்று அழுது இருக்கிறாள் . குழந்தை பிறக்கிற மாதிரி கனவு கண்டு .. கலைந்து அழுவாளாம் . ஒருநாள் திடீரென்று அவனை கூப்பிட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்க என்று சொல்லி விட்டாள்.
பிறகு அவனை அடியோடு மறந்து விட்டாள் . ஆனால் அந்த ஆளுக்கு வேறொரு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு .இப்போது அவன் சிறுவன் ...அச்சிறுவன் எங்கே இருக்கிறான் , எப்படி இருக்கிறான் என்று தெரிந்து வைத்து இருக்கிறாள் . வேறு ஊரில் உள்ள சிறுவன் படிக்கும் பள்ளிக்கு ஏதாவது உதவி செய்யும் சாக்கில் அந்த பயனை பார்த்து விட்டு வரும்போதெல்லாம் வயிறை தடவி அழுகிறாள் .!
அப்புறம் துணைக்காக வேறு ஒருவரோடு வாழ்ந்திருக்கிறாள் ....எந்த துணையும் நிலைக்க நாம் வழி செய்ய வேண்டும் . ...வலியுறுத்த வேண்டும் ...ஜீவிதா தனக்குள் பேசிக்கொண்டாள்.
என் போன்றவர்களுக்கு பதின்னான்கு , பதினைந்து வயதில் ஏற்படும் இந்த நிகழ்வில் முதலில் பாதிப்பது கல்வி ...பிறகு வெளியேற்றம் . இது ரெண்டும் நடந்த பிறகு திருநங்கை என்ன ஐ ஏ எஸ் அதிகாரியாகவா ஆக முடியும் . பிச்சைதான் எடுக்க முடியும் இல்லை எனில் உடம்பை விற்க முடியும் . வேலை செஞ்சு பொழச்சுக்குயேன் என்று சொல்பவர்கள் யாருமில்லை . மனசாட்சி உள்ளவர்கள்.!?
கல்வி இல்லாததால்தான் அவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள் ..அது மாறினால் எல்லாம் மாறும் மாற்றவேண்டும்.எப்படி?...யோசித்தபடியே இருந்தவள் ஐயோ சரஸ ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் செல்ல வேண்டுமே என்று அவசரமாக படி இறங்கினாள்.
...................................................
சரி மறுபடி கதை நடந்த இடத்துக்கு வருவோம் ......போலேரோக்குள் பதுங்கி இருந்த ஜீவிதா மெல்ல அக்கா கொடுத்த சாவியை திருகி வண்டியை ஸ்டார்ட் செய்கிறாள் . சரசும் , சூர்யாவும் எங்க அவங்கல்லாம் என்று கேட்கிறார்கள் .திட்டம் விளக்கப் படுகிறது .
.......................
இன்னோவா போலிஸ் ஸ்டேஷனில் நிற்கிறது .முதல் அணி ஒரு முடிவோடு இறங்குகிறது .....ஜீவாவை காப்பாற்ற வேண்டும் என்று .....
- பி .கு . படம் திருநங்கை சுதா . தன் தமிழ் / சமூக பணிக்காக அமெரிக்க தமிழ் பல்கலை கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றவர் .
கவிஜி இந்த புகைப்படம் போட ஒகே சொல்லிவிட்டார் . நன்றி .
அடுத்து எழுதுபவர்களும் ஒரு புகழ்பெற்ற திருநங்கையின் படம் ( குறிப்புகளோடு ) , இட்டால் நன்று .
நம் நாடாகவோ / வெளிநாட்டினரோ கூட இருக்கலாம்.