என் விளையாட்டுத் தோழி
பத்தாயிரம் நாட்களாயிற்று என் வாழ்வு.. இதில் பசுமையாகப் பதிந்து போன
”என் பால்ய வயதும் அதில் என்னோடு இருந்த என் விளையாட்டுத் தோழியும்”
காலத்தினாலும், சூழ்நிலையாலும் பிரிந்து விட்ட பொழுதினிலும்
என்னோடு அவள் இருந்த நாட்களில் சில மட்டும் நினைவுகளாக…
(கொஞ்சம் நீளமாகவும் நிறையவே ஆழமாகவும்)
சின்னஞ் சிறுசல்ல என் வயது…
சின்னஞ் சிறுசல்ல – முகத்தினில்
முக்கால்ப் பங்கு முடிகளால் மறைத்த பின்பும்- என்
மனம் சின்னஞ் சிறுவயதில்- உன்
கைபிடித்து விளையாடிய காலத்திலேயே
நிற்கின்றது…..
சிறு நண்டு குழி தோண்டும் இடமெல்லாம் தேடி…
அடி மேல அடிவைத்து அதைப் பிடிக்க ஓடி….
நீ… குழி செல்லும் முன்னே அது மறைந்து போக….
அலைமீது அமர்ந்து அழுது கொண்டு இருப்பாயே…
அது எங்கே மறக்கும்?
காலையின் கதிர்கள் கண்களில் தெறிக்க…..
கரையோர தாளையின் நிழலிலே உறங்கும் என்மீது
அலை நீரடித்துவிட்டுச் சிரிக்கும் உன்னை……
மணலிலே கால் புதைய துரத்திவரும்போது
அடைக்கலம் தேடி என் அம்மாவிடம் ஓடுவாயே…
அது எங்கே மறக்கும்?
பூந்தளிரில் மாலைகட்டி
புளியமரத்தடியில் பிள்ளையார் வைத்து
சிரட்டையிலே மண் பொங்கல் செய்து……..
உட்கார வைத்து என்னை உண்ணும்படி கேட்பாயே
அது எங்கே மறக்கும்?
செவ்வரத்தம் பூ… பறித்து செங்கல்லை
மாவாக்கி குழம்பு ஒன்று வைத்து….
ஊமத்தம் காய் பறித்து உள்ளிருக்கும் பருப்புடைத்து
சுண்டல் ஒன்று வைத்து……
ஆணை நெருஞ்சி இலை கசக்கி அதில் எண்ணை
எடுத்துப் பொரியல் பல செய்வாயே…
அது எங்கே மறக்கும்?
பச்சை வயல் வெளியில் ஒற்றை
வரப்புதனில் ஓடிப்பிடித்து விளையாடியதும்
உள்ளங்கை நிறைய இலந்தைப் பழம்
கொண்டுவந்து ஆசை காட்டி என்னை நீ
அழைப்பதுவும்.. வண்ணக் காய்கள்
ஆய்ந்து வந்து ஆளுக்கு நாலென்று பிரித்துக் கொள்வேமே….
அது எங்கே மறக்கும்….
கூட்டாஞ் சோறு ஆக்கயிலும்-எங்கேனும்
கூட்டமாக போகயிலும்- நம்முள்
குழு பிரித்து விளையாடையிலும்….
எப்போதும் என்பக்கமே நீ வர என் மனமும்..
என்னோடு வருகையில் உன் முகமும்
பூரித்து நிற்கும் அந்த வேளை…
அது எங்கே மறக்கும்?
சின்ன சின்னதாய் சில கால இடைவெளி..
அதில் சீருடையினரால் பலகாலம் நாம் வன வெளி
மீண்டு வந்து பார்க்கையில் நானிருந்த வீடும் இல்லை
நீயிருந்த வீடும் இல்லை…… எரிந்து மிஞ்சிய சாம்பலுக்கு
இடையில் நீ சேர்த்து வைத்திருந்த கடலோர சிப்பிகளையும்
கருகி மிஞ்சிய உன் கையெழுத்துகளையும்….
நினைவாக வைத்திருந்தேன்- நீ வருவாய் என…
நாட்கள் நாலு வருடங்கள்தான் ஆனது.. ஆனால்
அன்று வரை நீ திரும்பியிருக்கவில்லை..
நம் பூமியில் தேடுதல் எல்லாம் எப்போதும் முடிவிலிகள்....
நலமாய் இருப்பாயா? நாளை நீ வருவாயா என்ற
என்னங்களோடே நானும் பழகிப் போனேன் நீ இருந்த
பால்ய வயது தாண்டி பதின் வயதில் வாழ….
எப்படியேனும் நீ வருவாய் என் விளையாட்டுத் தோழியாய்…
தோழமையுடன்:
உன் பால்ய தோழன்
நா.சிறிதரன்….