கூடில்லாத் தேடல்
கருவறைக்குள் விழித்திருக்கும்
இருளின் காவலை
ஆழ்ந்திருக்கும்
பந்தொன்றின் தவமாய்
இரவின் மடியில்
வானம் ........!
விண்ணொளிக் கிறுக்கல்களாய்
விட்டில்பூச்சிகளின்
கால் குத்திய
கீற்றுச் சுவாலைகளில்
ஒடிந்து விழுவதாய்
மின்னல் வரிகள் …....!
நிலவை மறைத்த
போதனையில்
நிரம்பியிருந்ததொரு
பள்ளத்தாக்கு - அதனில்
விடிகின்ற தருணம்
குளிரின்
அரவணைப்பில்
மூக்குத்திப் பூவென …...!
அந்தரத்தில் தொலைந்ததில்
இதயத்தில் கடகடத்து
காது தூரத்தில்
இடி விலாசம் கிழிய ,
சாட்டை நுனி
மூர்க்கமாய் வெறித்ததில்
சிக்கி முக்கி உரசல் ….....!
சாளரங்களை
இழுத்துப் போர்த்திவிட்டு
கதவடைத்த
மழையில் - ஒழுகு
குடையானது பேனா........!
ஒன்றரை முழத்தில்
தொங்கிக் கொண்டிருக்கும்
மின்தடை
பூனை கவ்விய
மியாவ் வெளிச்சமாய் …...!
கூட்டுக் கச்சேரியில்
மொக்குத் தவளைகளின்
மௌனம் தாலாட்டும்
புனைமொழி
வாத்தியங்களின் ஊடல் …....!
சத்தமின்றி
வேர்க்கிறது காதல்
காதலனற்ற பொழுது
கவிதை விரித்த
குடைக் காளானாய் …..!
வெறும் கழுத்தில்
தலையாட்டி பொம்மையின்
அரங்கேற்றமென
கண்ணுக்குள்
நிழலாடும் காத்திருப்பில்
பனிப் பிரதேசக்
கோப்பையில் - மூச்சுவிடும்
ஆற்றாமையாய்
பொதிந்திருந்தது மேகமொன்று ….!
இனி
எத்திசையில் வருமோ
பருவக்காற்றென
புழுதி குமட்டிய சேற்றில்
ஈரம் சொட்டக்
கிளர்ந்தது
செந்தாமரை அழுகல்......!
கூடில்லாப் பறவையொன்றின்
தேடலில் சிவக்கும்
நடுநிசி ஓலத்தில்
வாரி முடிந்த
கொண்டைகளாய்
மணித் துளிகள் ........!