மலையடிவாரத்தில்

தடையான காதலை உடைத்து
தடை இல்லா உலகம் சென்று
இன்பமாய் உலாவலாம் வா
என் பட்டணத்துப் பைங்கிளியே
என்று அழைத்து வந்தான் என்னவன்....!!!

பாதை அறியாமல் விழித்தேன்
பயணத்தை நினைத்து வியந்தேன்
இருவருக்கும் தடை இல்லை
என நினைத்து பூரித்தேன்....!!!!

நடை பாதை எங்கும் பச்சை புல்
இடை இடையே உயர்ந்த மரம்
மரத்தடியில் உதிர்ந்த மலர்கள்
மர உச்சியிலே குயில் மெல்லிசைக்க
புதியதோர் உலகம் கண்டேன்
அந்த நொடியினிலே நான்....!!!!

மலையில் மோதி மரத்தை ஆட்டி
நீரில் விழுந்து வீசிவரும் தென்றல்
மெதுவாக என்னை உரசி செல்லவே
சிலிர்த்தது என் உடல்...!!!

கரம் கொண்டு அணைத்தேன் என்னவனை
சிரித்த முகத்துடன் சேர்த்தே பிடித்து நடந்தார்
அவரும்...!!!!

குயில் இசைக்கு நான் பாட
மெல்லமாய் அவர் கைகள்
தாளம் போட மயில் வந்து
ஆடும் முன்பே நீவாடி ஆடி
என் பக்கம் என்று கேலியாக
அவர் கொஞ்ச...!!!!

நான் சாய்ந்தாடவே தாங்கிப்
பிடித்தது மூங்கில் மரம்...!!!

ஒளிந்து விளையாடி வரக்
குடை விரித்தது ஆங்காங்கே
குட்டை மலை...!!!!

களைத்துப் போகும் தருணம்
வாவென அழைத்தது
மலை அருவி....!!!

இறங்கி நீராடையிலே எங்களுடன்
இணைந்து கொண்டது சின்ன மீன்
கிட்ட வந்து முட்டி எட்டிப் போய் துள்ளி
வித்தை காட்டியது....!!!!

அருவியில் நான் நீராடவே
இன்ப வெள்ளத்தில் என்
உள்ளம் நிறைந்தது...!!!

வெள்ளைப் புறாவின் இறகு எடுத்து
விரிந்தே இருக்கும் பணையின் ஈக்கு
கொண்டு என்னவனின் கைகாட்டிய
வித்தையிலே உருவானது ஒரு அழகிய
விசிறி....!!!!

குரும்புக்கார குரங்கு உசுப்பி விட்ட
மாங்கனி கொத்துக் கொத்தாகத்
தொங்கிய நாவல் கனி தனக்கு
மட்டுமே சொந்தம் என்று முசுறுக்
கூட்டம் பிடித்து வைத்திருந்த காட்டுக்
கனிகள் தீரத்தது எங்கள் பசியை...!!!

சற்று வெடவெடத்துப் போனேன்
காற்றில் படபடஎன்று ஆடிய
பாம்புச் சட்டையைப் பார்த்து நான்
ஒரு கணம்...!!!!

காட்டு மல்லி மலர் எடுத்து அல்லி
இலை எடுத்து புல்விரித்த தரையில்
போட்டு விட்டார் தூங்க மெத்தை
ஒன்று...!!!!

இழுத்து விட்டேன் மூச்சை
நறுமணத்தில் எத்தனையோ
மோகம் வந்து மோதியது என்னை...!!!

தடை இன்றி காதல் புரிந்தோம்
உடல் நெருங்காமல் உள்ளம்
தழுவினோம் இயற்கையுடன்
இணைந்து இன்பமாய் இன்று...!!!

வாகனத்தின் இரைச்சலும் மக்களின்
ஓசையும் அமைதி இழந்த சூழலில்
ஜோடி போட்டு காதல் புரியும் என்
பட்டணத்துக் காதலையும் அமைதியான
இச் சூழலையும் நினைத்துப் பார்க்கவே
முகம் சுழித்தேன் பட்டிக்காட்டு அழகைப்
பார்த்து வியப்புற்றேன்...!!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (7-Oct-14, 1:42 pm)
பார்வை : 117

மேலே