வாழ்நாளில் இன்பம்
ஈரைந்து மாதம் கடந்து இப்புவி தனில் பிறந்து
தாயிடம் பாலருந்தி தந்தையிடம் நெறி பயின்று
பாலனாய் பள்ளி சென்று கல்விதனை கற்றுணர்ந்து
தேடிப் பணி அமர்ந்து தெள்ளமுத மணம் புரிந்து
நாடி இன்பம் பொருள் நன்முறையில் நட்டமின்றி
சேர்க்கும் வகையறிந்து வையத்தில் உயர்ந்திட்டு
பாங்குடனே பிள்ளை பெண் எனப் பெற்று
நீண்ட நெடும் பயணம் செல்லும் மனிதருக்கு
வேண்டும் இன்பம் விளைத்து விதி செய்தவன் கடவுள்தானே!
இதனை இவன் மறந்து வெற்றி எல்லாம்
பெற்றது என் சக்தியினால் என செருக்கு கொண்டு
நித்தமும் தற்பெருமை பேசி வெட்டியாய் பொழுது போக்கும்
புலிகள் உண்டு புவனமிதில் புற்றீசல் போல் பலரும்
சிந்தனையில் சிறிது கூட மனிதமில்லா மனதுடனே
கற்றது கடலளவு கல்லாதது எள்ளளவு என்றெண்ணி
நிதம் கற்பனையில் களிப்புற்று கண்டபடி வாழுதலால்
சொந்த வீட்டில் கூட மதிப்பின்றி வீணாய் தான் போவாரே!