இதுதாண்டா வாழ்க்கை

பித்து பிடித்து
சொத்துக்கள்
நித்தமும்
சேர்த்தாலும்....
எண்சாண் உடம்பு
ஆறடி மண்ணில்
அடங்கத்தான்
போகிறது ஒரு நாள்.

காடு மேடெல்லாம்
வளைத்து
வேலிகள் நட்டாலும்....
காற்றடைத்த பை
காற்றிழந்து
மண் கவ்வத்தான்
போகிறது ஒரு நாள்.

சிரத்தினில்
வைரக்கிரீடங்கள்
சூட்டினாலும்.....
உடலெல்லாம்
ஒட்டியாணம்
தரித்தாலும்....
ஒட்டுத்துணிகூட
இல்லாமல்
இவ்வுலகைவிட்டு
ஓடத்தான்...
போகின்றாய்...
ஒருநாள்.

பல்லக்கில் சென்றாலும்....
பகட்டாய் வாழ்ந்தாலும்....
பணப் போர்வைக்குள்
அடங்கிட்டாலும்....
பாடையில்...
செல்லத்தான்...
போகின்றாய்...
ஒருநாள்.

உயர் பதவியில்
உள்ளோர்
அடக்கி
வாசிக்கத்தான்
வேண்டும்
இல்லையெனில்....
நீதிதேவதை
கட்டை தட்டி
அடக்கிடுவாள்
நான்கு சுவற்றுக்குள்

மக்கள் சேவையே
மகேசன் சேவை
என்று முழங்கிட்ட
விவேகானந்தர்
காவியுடையணிந்து
மக்கள் மனதில்
காலமும்
நின்றானே.

மானுடம்
போற்றிய
மகாத்மா
மேல் அங்கிகூட
இல்லாமல்
போராடி
மக்கள் மனதில்
மேலோங்கி நின்றாரே.

கல்வி தந்தை
காமராசரை
காலன்
அழைத்தபோது
சல்லி காசு கூட
இல்லையே...
அவரிடத்தில்....

மனிதனின் பதவி
நேற்று கோபுர உச்சியில்
இன்று பாதாள வீழ்ச்சியில்
ஆண்டவர்களுக்கும்
ஆள்பவர்களுக்கும்
சேர்த்துத்தான்
சொல்லுகிறேன்.
நேற்று இருந்தது
இன்றைக்கு இல்லை
இன்று இருந்தது
நாளைக்கு இல்லை.
இதுதாண்டா உலகம்
இதுதாண்டா வாழ்க்கை. .

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (7-Oct-14, 10:18 pm)
சேர்த்தது : பெ கோகுலபாலன்
பார்வை : 505

மேலே