என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

வெக்கக் காத்து
வேகமா மாறிப் போக
குளு குளுன்னு தென்றல் காத்து
முகத்தோடு முத்தமிட
சுட்டெரிக்கும் சூரியனும்
குளிருக்கு குடில் தேட
பொழுதுக்கு கார்மேகம்
புதுவித வண்ணமிட
மழைச்சாரல் மனதோடு
மிருதங்கத் தாளமிட
ஏதேதோ சொல்லிச் சோல்லி
மழை வந்து மண்ணில் விழ
ஒத்தையடி பாதையில-மழைய
ரசிச்சபடி நான் நடக்க
பிடிப்பில்லா மண் போல
என் மனசும் சரிந்ததென்ன.
மண்ணோடு கூடிடவே
மழை மண்ணில் விழுந்திடுதோ
மேளதாளம் கொட்டியதை
உலகுக்கு சொல்லிடுதோ
விதையோடு என்ன கதை
சொல்லியது விழுந்திடுதோ
விதையெல்லாம் மழைதேடி
வான் நோக்கி நீண்டிடுதோ
மரத்தோடு என்ன கதை
சொல்லியது விழுந்திடுதோ
அதை எண்ணி எண்ணி
கிளையெல்லாம் கண்ணீரைச் சிந்திடுதோ
வண்டோடு என்ன கதை
சொல்லியது விழுந்திடுதோ
வண்டெல்லாம் ஒன்று கூடி
ரீங்காரம் செய்திடுதோ
மண்ணோடும் விதையோடும்
மரத்தோடும் வண்டோடும்
கதை கதையாய்
சொல்லும் மழை
என்னோடு என்ன கதை
சொல்லி மண்ணில் விழுந்திடுமோ.

எழுதியவர் : sridhar (10-Oct-14, 11:20 am)
பார்வை : 135

மேலே