கருமி

எதிர்பார்ப்பை குறைத்து கொள்ளுங்கள். மிக சாதாரணமாக வாழ்வை கடந்து சென்ற ஒரு சம்பவத்தின் பதிவு. பலத்த மழை, கதவின் அருகில் எதுவோ உராயும் சப்தம். வழிபோக்கர் அல்ல திருடன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்பி கதவை திறப்பது முட்டாள் தனம். யாரது என்று குரல் குடுக்க எத்தனிக்க பயம் தொண்டையை அடைத்தது. ஓயாமல் வாயாடும் சிறுமி தான் நான் அப்போது. இருந்தும் அடிவயிற்றில் திகில்!

மின்னி கொண்டிருந்த பூஜ்யம் வாட்ஸ் விளக்கை அனைத்து விட்டு, ஜன்னலை லேசாக திறந்து பார்வையை விரிவு படுத்தினேன். கும் இருட்டு பார்வையை இழந்த தாக்கம் தந்தது. ஆனால், வெளியில் யார்? தெரிந்தால் தானே நித்திரை?
சில விநாடி முயற்சிக்கு பின் வெளியில் மனிதர் யாரும் இல்லை என்று நிச்சயபடுத்தி கொண்டேன்.

நீர் சொட்ட நனைந்து விட்டு புகழிடம் தேடி வந்திருந்தது கருமி. வந்தவுடனே பெயர் சூடி விடவில்லை நான். ஆனால் அதிக நாட்களும் எடுத்து கொள்ளவில்லை. அப்போதைக்கு இரண்டு சாக்குகளை பாரி வள்ளல் என போர்த்தி விட்டேன். அந்த மயில், பாரிக்கு 'பதிலாக' என்ன தந்தது ? எழுதப்படவில்லை. என் கருமி அமிர்தமான அன்பை தந்தது!

பூனை படையை படத்தில் பார்த்திருக்கிறேன். ஒரு நாய் மட்டுமே படையாய் மாறியது என் வீட்டில் தான். தஞ்சமாய் வந்தது தாராளமாய் ஒட்டிகொண்டது.
எப்போழுதும் காலை சுற்றியபடியே கொஞ்சி உலாவும்.

அதன் உடன் நடக்கும் பெருமிததிர்க்காகவே சாலையில் அதிகம் இறங்கி நடந்ததுண்டு. திடீரென்று ஒரு நாள் சாலையை கடக்கையில் வாகனம் ஒன்று கருமியை இடித்துவிட, அது நலம் பெற விரதம் இருந்த நாட்கள் கூட உண்டு. அவ்வளவு ஒட்டிகொண்டேன் அதனிடம்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் நாயை மருத்துவமனை கூட்டி செல்லும் அளவிற்கு அப்பொழுது நாகரிகமோ, வசதியோ இல்லை. எனவே அதற்கு குணமானது என்ற நம்பிக்கையில்/ அனுமானத்தில் காலம் கழியலாயிற்று. சில வரங்கள் கழித்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிற்று.

பள்ளி முடிந்ததும் கருமியுடன் வீட்டு தோட்டத்தில் விளையாட சென்றுவிடுவேன். வீட்டுப்பாடம் முடித்துவிட்டு கடைக்கு சென்று அங்காடி பொருட்கள் வாங்கி வருவோம். இரவு உணவாய் அதற்கு பாலும் வருக்கியும் தருவேன்.

அன்று பள்ளி முடிந்து வருகையில் வீட்டில் ஒருவரும் இல்லை. பக்கத்துக்கு வீட்டில் ஏக கூட்டம். கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே ஓடினேன் . அந்த வீட்டில் முத்திக்கு உடல் நிலை சரி இல்லமால் போயிருந்தது . அவர் எப்போழுதும் கடுகடு என்று இருப்பார். முதுமை தான் காரணமாய் இருக்க கூடும். யாரிடமும் சிரித்து கூட பேசிவிட மாட்டார். மனிதர்களுக்கே இன்னிலை என்றால் கருமியின் கதி சொல்லவா வேண்டும்? அருவருப்பான பார்வை தான் கருமிக்கு முத்தியின் அன்றாட பரிசு!

இரவு வேலை வந்ததும் முத்தியின் நிலை கவலைக்கிடம் ஆனது. என் பாட்டி எனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். "படு மா" காலையில் சரியாகி விடும் என்று என்னை தன் கையில் (என் வழக்கமான தலையணையில்) கிடத்தி உறங்க வைத்தார். நடுநிசி ஆனதும் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். பாட்டி எனக்கு முன்னதாகவே விழித்திருந்தார்.

அரண்டு மிரண்டு விழிக்கும் என்னை கட்டிக்கொண்டு " பயப்படாத தங்கம், நாய் கண்களுக்கு எமராஜன் தெரிவார் என்ற கதை நினைவில் இருக்கிறதா? " என்று வினவினார் . "ஆமாம் அம்மா ", என்றேன்! "இன்று தான் நாம் முத்தியை பார்த்தது கடைசி போலும்", என்று சங்கட பட்டார். ஐயோ சொல்ல மறந்துவிட்டேன்.. வெளியில் கேட்ட சத்தம் நாயின் ஊளை! பயம், பரிதாபம் என்று பல உணர்வுகள் ஒன்றாய் புரண்டது. கண்ணீர் எட்டி பார்க்க அப்டியே உறங்கி போனேன்.

காலை மிகவும் ரம்மியமான பனி பொழிவுடன் அமைதி காத்தது. ஒருவகை பீதியுடன் வெளியில் சென்றேன். முத்தயின் உடல் நிலை குறித்து பெரும் கலக்கம். ஆனால் அங்கே அனைவரும் வெகு சாதாரணமாய் காப்பிக்குடித்து கொண்டு இருந்தனர். பெருமூச்சு விட்டுக்கொண்டேன். எல்லாம் இயல்பு நிலையில் இருக்க மனம் அமைதியில் திளைத்தது.

பாட்டி மிகவும் சோகமாய் அமர்ந்திருந்தார். "என்னமா ஏன் இப்படி உட்காந்திருக்க?", என்றேன். "தோட்டத்தில் சென்றுப் பார்", என்றார். எட்டிப்பார்த்தால் இதயம் கனத்தது! கருமியின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. :'(
முத்திக்கு அன்று முதல் கருமியை மிகவும் பிடித்துப்போனது. தன்னுயிர் ஈந்து என்னுயிர் காத்த ஜீவன் என்று கண்ணீர் மல்க பெருமிதம் கொள்வார்.

நம்மை பொறுத்தவரையில் பாசக்கயிறு இடம் மாறி வீசப்பட்டது! அவருக்கோ கருமி குலசாமி ஆகிப்போனது !

எழுதியவர் : சரண்யா (10-Oct-14, 5:13 pm)
பார்வை : 202

மேலே