நிச்சயதார்த்தம்..

உன்னை
பெண்பார்த்து வந்த
நாளிலிருந்துதான் ..
மல்லிகை
என் இதயத்தில்
வேர் பிடித்துக்கொண்டது..
மனசு
காதல்மகரந்தசேர்க்கையில்
சூல் பிடித்துக்கொண்டது...

உனது கைகளின்
நடுக்கத்தில்
தேனீர் கோப்பைகளின்
மெல்லிய அதிரல்...
காதல் பாக்ஷையை
தந்தியில் சொன்னது...

உனக்கு பிடிச்சிருக்கா...?
யாரோ கேட்டார்கள்
தும்மலுக்கு மூடிக்கொள்கிற
இமைகள்மாதிரி
அனிச்சையாய்....
என் தலையை ஆட்டியது
நீ.....
நீயோ புன்னகையோடு
நிமிராமல்...
மெளனத்திற்கு
இதைவிட
கனமான அர்த்தம் ஏது...?

பாரம்பர்யம்
பிண்னணியென்று
புறம் மட்டும்
அலசப்படவில்லை....
எனக்கு என்ன பிடிக்கும்
என்பதிலிருந்து
உனக்கு என்ன பிடிக்காது
என்பதுவரை..
அகமும்
புதைபொருளாய்..
ஆராயப்பட்டிருக்கிறது...
பெற்றோர்களால்..


ரொக்கம் , நகையென்று
பெரியவர்கள்
ஏதேதோ பேசத்தான்
பார்த்தார்கள்...
துலாபார துளசிக்கு
விலையேதும்
இல்லையென்று
மறுதலித்தேன்...

உடல்தீண்டி
பின்
உறவு கொள்ளும்
காதலில் எனக்கு
உடன்பாடில்லை...
நிலமறியாத
விவசாயிக்கு
ஏது நல்ல விளைச்சல்..?

மனைவியென்ற...
உறவோடு
உனை தீண்டுவதுதானே..
மரபுகளின் எல்லை..
ஊர் கூடி
கல்யாண தேர் இழுக்க...
ஜம்மென்று
உற்சவமூர்த்திகளாய் நாம்..

நிச்சயதார்த்தம்..
நிச்சயமாய்....
வாழ்க்கைக்கு
அர்த்தம்.. அர்த்தம்.... !!!!!!

எழுதியவர் : முருகானந்தன் (31-Mar-11, 3:15 pm)
பார்வை : 630

மேலே