ஒரு மழை ராத்திரி
**********எனது முதல் முயற்சி, பிழை இருந்தால் திருத்த வேண்டுகிறேன்********
அன்று வானம் இருள் கவ்விக்கிடந்தது, இரக்கமில்லாதோர் இதயம் போல...
வேலை முடிந்து அனைவரும் அந்த ஆயத்த ஆடை நிறுவனத்திலிருந்து பரபரப்புடன் கிளம்பி கொண்டிருந்தார்கள், ஆனால் அனிதா மட்டும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்...
ஏய்..அனிதா கெளம்பலையா...மழை வர்ற மாதிரி இருக்கு இப்போ கிளம்பினாதான் மழைக்கு முன்னால வீடு போய் சேர முடியும் என்று அவள் தோழி அதட்டினாள்...கம்பெனி பஸ்சிற்கு செல்லும் அவசரத்தில்…ஏய் நீங்க போங்கப்பா, நான் ஓவர் டைம் முடிச்சு அவுட் பஸ்ல வந்துறேன் என்றாள் அனிதா.
அவளின் சம்பாத்தியத்தில் தான் அவள் கரையேற முடியும் என்று அவள் தோழிக்கு தெரியும், அதனால் மெளனமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்.
அனிதா மீண்டும் வேலையில் மும்முரமானாள். வானம் ஆர்பரித்து அழுது தீர்த்து கொண்டிருப்பது கூட தெரியாமல்... அவளின் ஷிப்ட் முடியவும், மழை சற்று ஓயவும் சரியாக இருந்தது...ஆனாலும் தூறல் விட்ட பாடில்லை...துப்பட்டாவையும், கூடையையும் குடையாக்கி ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தாள்.
அத்தனை பேருந்தும் நிறை மாத கர்ப்பமாக, தண்ணீரையும் சேற்றையும் சந்தனமாக வாரி
இறைத்து சென்று கொண்டிருந்தது...காத்திருந்தாள் பேருந்தின் வருகைக்காக...நேரம் சென்று கொண்டே இருந்தது...அதே நேரம் அவளை சற்றே உரசினார் போல் வந்து நின்றது ஒரு ஷேர் ஆட்டோ... இறங்க வேண்டிய இடத்தை சொல்லி அந்த வயதான பெண்மணியின் அருகில் உட்கார்ந்தாள்...
அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் மேலும் இரண்டு பேர் ஏறி முன் சீட்டில் இரு பக்கமும் உட்கார்ந்து ஆட்டோ டிரைவரிடம் சிரித்து பேசிக்கொண்டே வந்தார்கள்...அந்த அலறலான குத்து பாட்டு சத்தத்தில் அவர்கள் பேசுவது ஒன்றும் விளங்கவில்லை...அடுத்த நிறுத்தத்தில் அந்த பெண்மணியும் இறங்கி விட்டார்கள்...
ஆட்டோ கொஞ்ச தூரம் சென்ற பிறகு வேறு ரோட்டில் திரும்பியது...ஏதோ சிந்தனையில் இருந்தவள் படக்கென்று...அண்ணா வேறு பக்கமா போறீங்க என்றால்... இல்லம்மா மழைனால ரோடு க்ளோஸ் பண்ணிருக்காங்க என்றான்...
சிறிது தூரத்தில் ஆட்டோ செம்மண் ரோட்டில் இறங்கி சாய்ந்தாட ஆரம்பித்தது....ஆங்காங்கே மட்டுமே வெளிச்சம் இருந்த அந்த ரோட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு வாங்கி அடங்கியது அந்த ஆட்டோ... இறங்கிய இரண்டு பேரும் மற்றும் அந்த ஆட்டோ டிரைவரும் சேர்ந்து அவளிடம் வம்பு பண்ண ஆரம்பித்தார்கள்...அங்கு சத்தம் போட்டாலும் சட்டென வருவதற்கு யாருமில்லா இடமாய் தெரிந்தது அவளுக்கு...ஆனாலும் மனதில் தைரியம் கொண்டு போராட ஆரம்பித்தாள்...
சற்று தூரத்தில் ஒரு விளக்கின் வெளிச்சம் தன்னை நோக்கி வருவதை கண்ட அவள் வெறியோடு சத்தமிட்டவளாய் போராடினாள்... வேகமாக வந்தவன் சட்டென பைக்கை அப்படியே விட்டவனாய் அவர்களை ஆத்திரத்துடன் அடித்து துவைக்க ஆரம்பித்தான்...வலி பொறுக்க முடியாமல் இடையில் ஏறிய இருவரும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள்...
ஆட்டோக்காரன் ஆட்டோவை எடுக்க போராடி கொண்டிருக்கையில் தான், அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனம் வந்து அருகில் நின்றது...வந்தவர்கள் நிகழ்வை கேள்விப்பட்டு ஆட்டோக்காரனை செமையாக கவனித்தார்கள்...
அப்பொழுது தான் அனிதா அந்த இளைஞனின் முகம் பார்த்தாள் ரோட்டோரம் தெரிந்த அந்த மங்கிய வெளிச்சத்தில், அந்த இளைஞன் அகிலன் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு நடந்ததை இன்ஸ்பெக்டரிடம் விளக்கி கூறினான்...
இன்ஸ்பெக்டர் அவளருகில் வந்து எங்கம்மா போகணும் என்று கேட்டு, சக்தி என்று அங்கிருந்த காவலரை அழைத்து, இதே ஆட்டோல போய் அந்த பொண்ண பஸ் ஏத்தி விட்டுட்டு...அப்டியே ஸ்டேஷன் வந்திருங்க...இவன ஸ்டேஷன் ல உக்கார வைங்க...நான் ரோந்து போயிட்டு வந்திறேன் என்று கிளம்பினார்.
அப்பொழுதுதான் சட்டென நினைவுக்கு வந்தது...இதே போல் ஒரு மழை ராத்திரி, கூட்டம் நிரம்பி வழிந்த பஸ்சின் நடுவில் சிக்கி கொண்டிருந்தாள்...ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்ற பஸ்ஸில் முன் பக்கமாக நாலைந்து பேர் ஏறினார்கள்...நடத்துனர், டிக்கெட் வந்து வாங்கிங்கங்க என்று சத்தமிட்டார்...அப்பொழுது தன்னை இடித்துக்கொண்டு யாரோ முன்னே செல்வதை கண்ட அவள் சத்தமிட்டு திட்ட ஆரம்பித்தாள்...வந்துரானுங்க...என்ன திட்டினாலும் அறிவுங்கிறதே வராது...முன்னாள் போனவன் குழம்பியவனாக சத்தம் வந்த திசை நோக்கி திரும்பினான்...திட்டுவது தன்னைத்தான் என்பதை உணர்ந்த அவன் அவள் முகம் பார்த்தான்.
அந்த நொடி அவன் மனம் காதல் எனும் அணுவில் கருவுற்றது...!!! அன்றிலிருந்து அவனை அறியாமல் அவள் வசப்பட்டு தொடர ஆரம்பித்தான் அவள் அறியாமலே...
அன்று அவளிடம் திட்டு வாங்கிய இளைஞன் தான் இவன் என்று ஞாபகம் வந்தது...மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு...நன்றியுடன் அவன் முகம் பார்த்து மீண்டும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தாள்...இனி அவனை என்று காண்போம் என்ற ஏக்கத்தோடு...!!!
காதல் சொல்லலாமா என்று நினைத்து அடங்கியது அவன் மனம் அந்த நொடியே...
காதல் சொல்ல இது தருணம் அல்ல என்று...தொட்டு விடும் தூரத்தில் இருந்தே... காதலைத்தொடர்ந்தான்..!!!